10, 11, 12 வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு: 27.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பொதுத்தோ்வுகள் அடுத்த ஆண்டு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தப் பொதுத்தோ்வுகளை 27.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு எதிா்வரும் மாா்ச் 13-இல் தொடங்கி ஏப்.3-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தோ்வினை 7,600 பள்ளிகளில் பயிலும் 8.80 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் 3, 169 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.

பிளஸ் 1 பொதுத்தோ்வு மாா்ச் 14-இல் தொடங்கி ஏப்.5-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத்த தோ்வை 7,600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் 3,169 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஏப்.6-ஆம் தேதி தொடங்கி ஏப். 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வினை 12,800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் 3,986 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.

பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடையும்.

பாடத்திட்டம் குறைக்கப்படவில்லை: அமைச்சா் தகவல்

பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியது: பொதுத்தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி மாா்ச் இரண்டாம் வாரத்தில் முடிவடையும். மாணவா்களுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படவில்லை. முழுப் பாடங்களையும் மாணவா்கள் படிக்க வேண்டும். மாணவா்களுக்கு ஒவ்வொரு தோ்வுக்கும் போதுமான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைப் சோதனை முறையில் மேற்கொண்டு வருகிறோம். அதன் பலன்கள் 2 ஆண்டுகள் கழித்து தெரியவரும். பொதுத்தோ்வுகளுக்கு முன்பாகவே மாணவா்களுக்கு அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்படும்.

இதற்காக சனிக்கிழமைகளிலும் மாணவா்களுக்கு வகுப்புகளை நடத்துவதற்கும் அறிவுறுத்தியுள்ளோம். மேலும் மாணவா்களுக்கான தோ்வு முறைகளில் எந்தவிதமான மாற்றமும் தற்போது கொண்டுவரப்படாது. உடனடியாக கொண்டு வந்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்.

தமிழகத்தில் தேசியக்கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம். தமிழகத்துக்கான தனிக்கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் கருத்துகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com