
உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்றதும், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சனிக்கிழமை மாலையே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து, நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகினர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, தனது தாயாரின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிபந்தனையின் பேரில் பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வெளிவந்த நளினி வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதமாக அவர் பரோலில் தனது தாயார் பத்மா உடல் நிலையை கவனித்து வந்த சூழ்நிலையில், நேற்று அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்பின் நகல் சிறைச்சாலைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், பரோலில் உள்ள நளினியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்பு சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சாந்தன், முருகன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன், முருகன் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைப்பதற்காக, அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது போலவே, மற்ற நால்வரும் அடைக்கப்பட்டிருக்கும் புழல் மற்றும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கும் உச்ச நீதிமன்றத்தின் விடுதலை செய்யும் உத்தரவு கிடைக்கப்பெற்றது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தனர். இருவரையும் பேரறிவாளன் வரவேற்றார். இருவரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது உறவினர்கள் சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி பேசுகையில், நளினி இனி சுதந்திர பெண். அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் என்று கூறினார். மேலும், அவர் சென்னையிலேயே இருப்பாரா அல்லது லண்டனில் தனது மகளுடன் இருக்க விரும்புவாரா என்று கேட்டதற்கு, அது பற்றி அவர் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
முருகனின் நிலை குறித்துக் கேட்டதற்கு, விடுதலையாகும் 4 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சாந்தன், இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கான நடைமுறைகள் முடியும் வரை அவர் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்படுவார் என்று புகழேந்தி தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க.. இவர்கள் 4 பேரும் எங்கே செல்வார்கள்?
உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.