ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தம் அறிவிப்புத் திட்டம் தொடக்கம்

சென்னை மாநகரப் பேருந்துகளில், அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிக்கும் வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தம் அறிவிப்புத் திட்டம் தொடக்கம்
ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தம் அறிவிப்புத் திட்டம் தொடக்கம்
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில், அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிக்கும் வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் உடன் கூடிய அறிவிப்பு வசதி கொண்டுவரப்படும் என்று திட்டத்தைத் தொடக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின்  150 பேருந்துகளில் முதல் கட்டமாக புவிசார் நவீன தானியங்கி (ஜி.பி.எஸ். ) பொருத்தப்பட்டு,  பேருந்து நிறுத்தம் குறித்த ஒலி அறிவிப்பு அறிமுக விழா இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நான்கு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் பேருந்தில் ஏறி, ஜி.பி.எஸ். கருவியின் செயல்பாட்டை ஆய்வு செய்த சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின், அரசு மாநகரப் பேருந்துகளில் முதல் கட்டமாக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு பேருந்து நிறுத்தங்கள் குறித்து பயணிகளுக்கு 300 மீட்டருக்கு முன்னதாகவே வரக்கூடிய நிறுத்தம் குறித்த அறிவிப்பை வழங்கக்கக்கூடிய கருவி தொடங்கி வைத்துள்ளேன்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள மாநகர பேருந்துகளில் இத்தகைய வசதிகள் செய்து தரப்படும் எனவும் முதல் கட்டமாக 150 பேருந்துகளில் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

மேலும், நாளை தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வருமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்"  என தெரிவித்தார் உதயநிதி.

மேலும்,  அரசுப் பேருந்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 150 பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதியுடன் ஒலிப்பான்கள் அமைக்கப்பட்டு அடுத்து வரும் பேருந்து நிறுத்தங்கள் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கு அறிவிக்கும் வசதி இன்று முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் எனப்படும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, பேருந்து நிறுத்தம் தொடர்பான ஒலிப்பான் மூலம் அறிவிக்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு, விரைவில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

  சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 150 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேற்கொண்டு கூடுதலாக 1,000 பேருந்துகளில் செயல்படுத்த சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொண்டு எவ்வித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்கிட ஏதுவாக இருக்கும்.

மேலும், இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு இத்திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே, புறநகர் ரயில்களில், அடுத்த ரயில் நிலையம் குறித்த அறிவிப்பு வெளியிடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரயில் பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com