திமுகவில் வாரிசு அரசியல் காலத்தின் கட்டாயம்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on
Updated on
2 min read



திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவை அலுவலகத்தில் விளாத்திக்குளம் தொகுதி பேரவை உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், அந்த தொகுதியைச் சேர்ந்த திமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜூ பேசுகையில், திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலம் காலமாக உள்ளதுதான். இது காலத்தின் கட்டாயம். உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு தலைமைக்கு வந்தாலும் திமுகவில் உள்ள இன்றைய முன்னணி தலைவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம். திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல்வர் உள்ளார். 

வாரிசு அரசியல் கிடையாது: வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. உழைக்கின்ற தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்பிற்க வரமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று. 

எம்ஜிஆர் கட்சி தொடங்கி பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்து சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அவரது மறைவுக்கு பின்னர் இரண்டு அணிகளாக பிளவு பட்டாலும் காலத்தின் கட்டாயத்தில் ஜனநாயக முறைப்படி ஜெயலலிதா தலைமை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அதிமுக, திமுக என்பது அடிப்படையிலேயே வேறு. அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். 

திமுக இரட்டை நிலைபாடு: மேலும்,  பாஜகவினரோடு பயணித்தவர்கள் தான் திமுகவினர். தற்போது என்னவோ தீண்டத்தகாதவர்கள் போல் பாஜகவினரை பேசி வருகின்றர். திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படும் கட்சி. பாஜகவோடு கொள்கையில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. பாஜகவுடனான கூட்டணி என்பது வேறு. கொள்கை வேறு. இரு மொழிக் கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை. 

அதிமுக சிதறவில்லை: எம்ஜிஆர் தந்த இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. அதிமுக கட்சி சிதறவில்லை. கட்டுகோப்பாக உள்ளது. அதிமுக அமைப்பு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர். கட்சியில் எப்போதும் பிளவு இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார். 

இந்தப் பிரச்னைக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் நல்ல இறுதி முடிவு வரும். பன்னீர்செல்வம் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் அதிமுகவில் பல்வேறு போராட்டங்கள், பொன்விழா கூட்டங்கள் நடத்தியுள்ளோம். எனவே கட்சியில் எந்த பிளவும் இல்லை. 

திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஆக்கமான பணிகள் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டால் நாங்கள் போராடுவோம். திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர்களை கண்டு பயப்படுகிறார் என கடம்பூர் ராஜூ கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com