அபராதம் விதித்ததால் ஆத்திரம்: காவல் நிலையம் முன்பு குப்பையை கொட்டிய நகராட்சி ஊழியர்

தலைக்கவசம் அணியாததால் நகராட்சி ஊழியருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் காவல் நிலையம் முன்பாக குப்பைகளை கொட்டினார்.
அபராதம் விதித்ததால் ஆத்திரம்: காவல் நிலையம் முன்பு குப்பையை கொட்டிய நகராட்சி ஊழியர்
Published on
Updated on
1 min read

நாமக்கல்: தலைக்கவசம் அணியாததால் நகராட்சி ஊழியருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் காவல் நிலையம் முன்பாக குப்பைகளை கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. இவர் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்தார். அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிவேல், நகராட்சி ஊழியரை மடக்கி தலைக்கவசம் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்தார். இதனால் கோபமடைந்த கந்தசாமி அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த அவர் போக்குவரத்துக் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்து, தகராறு செய்ததை எண்ணி வேதனை அடைந்துள்ளார். பின்னர் மாலை 5 மணி அளவில் இரு துப்புரவு ஊழியர்களை அழைத்துக் கொண்டு பேட்டரி வாகனத்தில் குப்பைகளை நிரப்பியபடி நாமக்கல் காவல் நிலையம் முன்பு கொட்டினார். 

அங்கு வந்த காவல்துறையினர் கந்தசாமியிடம் கேட்டபோது, வண்டிகள் பழுதாகி விட்டதால் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும்,  அரை மணி நேரத்திற்கு பின் வந்து எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையம் முன்பு தேங்கி கிடந்த குப்பைகளின் துர்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுழித்தனர். 

அதன் பிறகு தான் போக்குவரத்து உதவி ஆய்வாளருடன் கந்தசாமிக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர்  கி.மு.சுதாவிடம் காவல்துறையினர் புகார் செய்தனர். அவர் சம்பந்தப்பட்ட நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமியிடம் விளக்கம் கேட்டுள்ளார். 

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், கந்தசாமியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவர் முழுமையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com