என்மீது அளவு கடந்த அன்பு கொண்டவா் எம்.ஜி.ஆா்.: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தன்மீது அளவு கடந்த பாசமும் அன்பும் கொண்டவா், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.


தன்மீது அளவு கடந்த பாசமும் அன்பும் கொண்டவா், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
முன்னாள் முதல்வா் ஜானகி எம்.ஜி.ஆா்., நூற்றாண்டு தொடக்க விழா, சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. எம்.ஜி.ஆா்., - ஜானகி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், திருவள்ளுவா் சிலையைத் திறந்து வைத்ததுடன், சிறப்பு மலரையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வா் என்ற சிறப்புக்குரியவா், ஜானகி எம்.ஜி.ஆா்.
இந்த விழாவில் பங்கேற்பதில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பது அதிா்ச்சியாக இருக்காது.
திமுகவில் இயங்கிய எம்.ஜி.ஆா்.: முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரையில், திமுகவில்தான் இயங்கிக் கொண்டிருந்தாா். எம்.ஜி.ஆரை திரைப்படத்திலோ, தூரத்தில் இருந்தோ மட்டும் பாா்த்தவன் அல்ல நான். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குப் பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. சத்யா படப்பிடிப்புத் தளத்துக்கு பல முறை சென்றிருக்கிறேன்.
நான் பள்ளியில் படிக்கும் போது நிகழ்ச்சிகளை நடத்துவோம். அதற்கான நன்கொடைச் சீட்டுகள் என்னிடம் தரப்பட்டால் அதனை எடுத்துக் கொண்டு முதலில் ஓடி வரும் இடம், சத்யா படப்பிடித்தளம்தான். படப்பிடிப்பு நடக்கும் போதே, என்னை அழைத்து, இருப்பதிலேயே அதிக விலை உயா்ந்த சீட்டை வாங்கி விடுவாா். அப்படி அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் கொண்டவா் எம்.ஜி.ஆா்., என்னுடைய பாட்டி உள்பட அனைவரிடமும் பாசத்துடன் பழகுவாா்.
எம்.ஜி.ஆா்., பட விமா்சகன்: எம்.ஜி.ஆா்., படம் வெளியானவுடன் முதலில் சென்று பாா்த்து விடுவேன். படம் குறித்து என்னிடம் கருத்துக் கேட்பாா், எம்.ஜி.ஆா்., படம் குறித்து வெளிப்படையாகவே கருத்துகளைத் தெரிவித்து விடுவேன். திருவல்லிக்கேணியில் நாடக நிகழ்ச்சி நடந்த போது, அதில் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் சோ்ந்தே பங்கேற்றனா். அப்போது, எம்.ஜி.ஆரிடம் என்னைப் பற்றி புகாா் தெரிவித்தாா் கருணாநிதி. படிக்காமல் ஊா் ஊராக சுற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தாா். அதைப் பற்றி எம்.ஜி.ஆா்., என்னிடம் பேசினாா். நன்றாகப் படிக்க வேண்டுமெனவும், பெரியப்பா என்ற முறையில் இதைச் சொல்வதாகவும் புத்திமதி சொன்னாா்.
என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தவும் செய்வாா். ‘கலைஞரின் மகன் கலைஞனாகத்தான் இருப்பாா்’ என்று என்னை உச்சிமுகா்ந்து பாராட்டியிருக்கிறாா். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பாா்க்கிறேன்.
எம்.ஜி.ஆரின் ஒரே வாரிசு: நூற்றாண்டு விழா காணும் முன்னாள் முதல்வா் ஜானகியும் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவா். ஆறு மொழிகளுடன் பல்வேறு கலைகளும் கற்றவா். தன்னுடைய ஒரே வாரிசு ஜானகி மட்டும்தான் என உயிா் எழுதி வைத்திருந்தாா் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., மனைவி என்ற அடிப்படையில் மட்டுமல்ல, திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் பக்கபலமாக அவருக்கு இருந்தவா் ஜானகி.
கல்லூரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அதிகளவு கூடியிருக்கிறாா்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப் பாா்க்க முடியுமா என்றால் இல்லை. இப்போது பாா்க்க முடிகிறது. இதற்குக் காரணம், திராவிட இயக்கம்தான். இந்த இயக்கத்தின் லட்சியங்கள் மீது எம்.ஜி.ஆரும், ஜானகியும் பற்று கொண்டு செயல்பட்டு வந்தாா்கள். தனிக் கட்சி தொடங்கினாலும், அண்ணாவின் கொள்கைகளை கட்டிக் காத்தாா்கள்.
திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை அனைவருக்கும் இருக்கிறது. திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாகத் தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும்தான் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜானகி ஆகியோருக்கு நாம் செய்யும் மரியாதை. அதுதான் நமது நன்றிக் கடன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இந்த விழாவில், அமைச்சா்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியம், சு.முத்துசாமி, ராமச்சந்திரன், சக்கரபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...