சேலம்: நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணம் திருடிச் சென்றதாக பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (62). இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவரது மகன் ஸ்டீபன் (24) டிப்ளமோ படித்து முடித்துவிட்டு மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஸ்டீபனுடைய பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பெண் ஒருவர் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேஸ்புக், வாட்ஸாப்பில் பேசிய பெண் யார் என்று ஸ்டீபன் அவரிடமே கேட்டபோது தனது பெயர் சரண்யா என்றும் சேலம் கிச்சிப்பாளையத்தில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்,
அதைத்தொடர்ந்து இருவரும் பேஸ்புக், வாட்ஸப் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளனர்.
இதைனையடுத்து ஒரு கட்டத்தில் சரண்யா ஸ்டீபனிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். சரண்யாவிடம் தொடர்ந்து பழகி வந்த ஸ்டீபன் அவரை விட்டு பிரிய முடியாததால் தனது குடும்பத்தில் இது குறித்து கூறியுள்ளார் .
இதை ஏற்றுக்கொண்ட ஸ்டீபனின் பெற்றோர்கள் சரண்யாவை திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 26.5.2022 ஆம் தேதி வாழப்பாடி அருகே உள்ள பேளூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், கடந்த நான்கு மாத காலமாக ஸ்டீபன் வீட்டில் வசித்து வந்த சரண்யா, அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சில நாள்கள் வெளியில் தங்கி இருப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபனின் பெற்றோர்கள் கேட்ட போது எனது உறவினர்கள் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஸ்டீபன் வீட்டிலிருந்த சரண்யா திடீரென மாயமானார். அவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட போது போன் சுச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வீட்டில் இருந்து 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும், வெளியே சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை. அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் சரண்யாவை தேடிய ஸ்டீபன் எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஸ்டீபனின் தந்தை பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரண்யாவை தேடி வந்தனர்.
இதையும் படிக்க | திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு!
பின்னர் சரண்யாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் சேலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை பிடித்து ஆத்தூர் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது சரண்யாவிற்கு ஏற்கனவே சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றதும் அவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் இருப்பதும் அதில் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்றதும் பேரப்பிள்ளைகள் இருப்பதும் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருவதாகவும், அதன் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒருவருடனும், கோவையைச் சேர்ந்தவர் ஒருவருடனும் திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் ஆத்தூரை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கு கோவையைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் சரண்யாவுக்கு தாய் மாமனாக நடித்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணம் திருடிச் சென்ற சரண்யாவையும், இதற்கு உடந்தையாக இருந்து தாய் மாமனாக நடித்த கோவையைச் சேர்ந்த ரகுவரன் ஆகிய இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மூன்று திருமணம் செய்ததை மறைத்து நான்காவது திருமணம் செய்து நகை பணம் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.