மாணவர்களிடம் விஷக் கருத்தை போதிக்கிறார் ஆளுநர்: கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

மாணவர்களிடம் தமிழக ஆளுநர் விஷக் கருத்தை போதிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். 
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

அரசின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்துகொண்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழக வரலாற்றை மாற்றிக் கூறி விஷக் கருத்தினை போதிக்கும் செயலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஈடுபட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் ஆர்.கனகவேலுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா, தமிழகத்தில் ராகுல் காந்தி நடைப்பயணத்தின்போது பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தினசரி செய்தி வர வேண்டும், இருப்பை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையாவது கூறி வருகிறார். அதுவும், குறிப்பாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத, தமிழ் உணர்வுக்கு எதிரான செய்திகளை சொல்லுவதில் மிகப் பயிற்சி பெற்று வருகிறார். அவர் எதையும் படித்து தெரிந்துகொண்டதாக தெரியவில்லை. அதற்கான பயிற்சியை கொடுத்துள்ளார்கள்.

இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும் போது, 'இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஒருகிணைத்தார்கள் என சொல்லுவது தவறு. அவர்களுக்கு முன்பே இந்தியா ஒருங்கிணைந்து இருந்தது' எனக் கூறியுள்ளார். இது ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பிழை.

விந்திய மழைக்கு தெற்கே இந்தியாவின் உயிர்நாடியாக இருந்தது தென்பகுதியாகும். இங்கு ஆரிய மன்னர்கள் யாரும் தென்பகுதியை வெற்றி கொண்டு ஆட்சி செய்யததாக வரலாறு கிடையாது. முகலாயர்களும் விந்திய மலையைத் தாண்டி தென்பகுதிக்கு வந்ததாக வரலாறு இல்லை. அவர்களுக்கு முந்தியும் யாரும் தென்பகுதியைத் தாண்டி வந்ததாக எந்த வரலாற்றிலும் காணப்படவில்லை. 

ஆங்கிலேயர்கள்கள் கிழக்கு இந்திய கம்பெனிதான் விந்திய மலையைத் தாண்டி சென்னைக்கு வந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு, மகாத்மா காந்தி சுதந்திரம் என்ற பெயரால் தென்பகுதிக்கு வந்து இந்திய அரசாங்கத்தை ஒருங்கிணைத்தார் என்பது வரலாறு.

ஆங்கிலேயருக்கு முன்பே இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது என்றால், தென் இந்தியா எங்கு இருந்தது. தென் இந்தியா இல்லாமல் இந்தியா முழுமை பெறுமா? இதை ஏன் யாரும் ஆளுநருக்கு சொல்லித் தரவில்லை அல்லது அவர் புரிந்துகொள்ளவில்லையா எனத் தெரியவில்லை.

தென் இந்தியா முழுவதும் திராவிடமாக இருந்து இன்று அதை தமிழ் என்று சுருக்கிவிட்டார்கள் என ஆளுநர் கூறியுள்ளார். இவர் என்ன, திராவிடம் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறுகிறாரா? அல்லது தமிழை வேண்டும் என்றே சிதைத்து விட்டார்கள் என்று கூறுகிறாரா? எங்களுக்கு புரியவில்லை.

ஆரம்ப காலத்தில் ஆரியம், திராவிடம் என்ற தத்துவம் இருந்தது. மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர் என்றும் இந்த பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் திராவிடர்கள் என்றும் புவி வரலாறு கூறுகிறது. திராவிடர்கள் தென் இந்தியாவில் மட்டும் இருந்தவர்கள் இல்லை. வட இந்தியாவிலும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் இருந்தவர்களை அந்த காலத்தில் திராவிடர்கள் என கூறியுள்ளனர். மிகப் பெரிய தங்கச்சுரங்கம் போன்ற வரலாறு கொண்டது ஆரிய, திராவிட போக்கு.

ஆனால், இன்றைக்கு நாம் சொல்லுகின்ற தமிழ் என்பது நிலையானது, நிரந்தரமானது. தமிழிலிருந்து பிரிந்த சகோதர மொழிகள்தான் தெலுங்கு, துலு, கன்னடம், மலையாளம் ஆகியவை என்பது மறுக்கமுடியாத வரலாறு. தமிழர்கள் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை.

வட இந்தியாவிலிருந்து சம்ஸ்கிருதம் படையெடுத்து வந்தபோது பிற மாநில மொழிகளை சுவிகரித்துக் கொண்டது. ஆனால்,தமிழை மட்டும் 99 சதவீதம் சுவிகரித்துக்கொள்ள முடியவில்லை. தமிழ் இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் தமிழர்கள் தமிழை நேசித்தார்கள்,  பாதுகாத்தார்கள், மேம்படுத்தினார்கள். இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். அவரின் நோக்கம் எல்லாம் ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சம்ஸ்கிருதம் என்பதாக உள்ளது.

ஆளுநர், தமிழக வரலாற்றை புரட்டிப் போட விரும்புகிறார். அதனை மாற்றி எழுத நினைக்கிறார். அரசின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்துகொண்டு விஷக் கருத்தினை பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதிக்கிறார். இது மிகவும் தவறானது. தமிழ் கலாசாரம் ஏந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளாது. எனவே, ஆளுநர் தனது போக்கிலிருந்து மாறிக்கொள்ள வேண்டும் என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து 711 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காந்தி காலத்திலிருந்து சோனியா காலம் வரை காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இது புதிய முறை அல்ல. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பாஜகவில் ஜனநாயகம் இல்லை, அங்கு தேர்தல் முறை பின்பற்றபடுவதில்லை.

குழந்தையைத் தந்தை கண்டிக்கும் தொனி போன்று திமுகவினருக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கூறியிருப்பதை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவெளியில் அவர் தன் கருத்தை கூறியிருப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது.

எந்த மொழியையும் தெரிந்துகொள்ளலாம், படிக்கலாம், திணிக்கக் கூடாது. இது கொள்கை, கலாசாரம், பண்பாடு, இறைவணக்கம் என அனைத்துக்கும் பொருந்தும். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சீர் திருத்தம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்த வரி என்பதுதான் காங்கிரஸ் கொள்கையாகும்.

பேட்டியின் போது, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் செந்தமிழ் அரசு, மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், மாவட்ட பொதுச் செயலர் வே.வீரமணி, தஞ்சை மாநகரத் தலைவர் பி.ஜி.ஆர்.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெடுவை ஜி.குணசேகரன், நகரத் தலைவர் ஆர்.கனகவேல், வட்டாரத் தலைவர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com