தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 9:07 am

DIN

'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து 'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Story image

இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். 

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5,000 மாணவர்கள் கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அந்தந்த பள்ளி வளாகத்திலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி

“நான் இன்று முதல் குட்டி காவலராகப் பொறுப்பேற்கிறேன். நான் எனது பயணத்தின் போது சாலை விதிகளைக் கவனமாகக் கடைபிடிப்பேன் என்றும், எனது உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன்.

ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்பதை அறிவேன். இரு சக்கர வாகனப் பயணத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இருக்கைப்பட்டை அணிய வேண்டும் என்றும் உணர்த்துவேன். இந்தச் சாலை பாதுகாப்பு உறுதி மொழியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு அதை உளமார பின்பற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்”.

Story image

அதனைத் தொடர்ந்து, 'குட்டி காவலர்' திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆசிய சாதனை புத்தகமான Asia Book of Records-ல் இடம்பெற்று அதற்கான சான்றிதழ் தமிழக முதல்வர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., உயிர் அறக்கட்டளை தலைவர் சஞ்ஜய் ஜெயவர்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், அறங்காவலர் ஜி. சவுந்தரராஜன், புரவலர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் திரு. வி. பாலகிருஷ்ணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர் திரு. வி. பத்ரி நாராயணன், இ.கா.ப., கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., உயிர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.