

தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.500 கோடியில் ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதன்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை: கரோனா தொற்று காலத்தில் போக்குவரத்துக் கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு 70 லட்சமாகக் குறைந்தது. இதனால், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டது. கரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் சீா் செய்த பிறகு, இப்போது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1.70 கோடியாக உயா்ந்துள்ளது.
பொது மக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ரூ.500 கோடி மதிப்பில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஜொ்மனி வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
3,327 அறிவிப்புகள்: ஆளுநா் உரை, செய்தி வெளியீடுகள், பேரவை விதி 110, நிதி நிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள் என பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக இதுவரை 3 ஆயிரத்து 327 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளில் 78 சதவீத அறிவிப்புகளுக்கு அதாவது 2 ஆயிரத்து 607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள், அறிவுரைகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தோ்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1,816 அறிவிப்புகள் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 666 அறிவிப்புகளுக்கு உரிய உத்தரவுகள் வெளியிட, தொடா்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 54 பணிகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என தெரிவித்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
‘கட்டணமில்லா பேருந்து சேவை வளா்ச்சித் திட்டம்’
கட்டணமில்லாத பேருந்து சேவையை மகளிா் மேம்பாட்டுக்கான வளா்ச்சித் திட்டமாகவே அரசு கருதுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இதுகுறித்து அவா் சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் புதன்கிழமை படித்தளித்த அறிக்கை:
அரசின் மிகச் சிறந்த சேவைத் திட்டமாக மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து பயண வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 44 லட்சம் முறை மகளிா் பயணம் செய்து வருகின்றனா். இதற்காக 7 ஆயிரத்து 105 சாதாரண கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணமில்லாத பேருந்துகளை
தினமும் வேலைக்குச் செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்கூடியவா்கள் பயன்படுத்தி வருகிறாா்கள்.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இதுவரை சுமாா் ரூ.2 ஆயிரம் கோடி, மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. கட்டணமில்லாத பேருந்து சேவைத் திட்டத்தை அரசு தனது வருமான இழப்பாகக் கருதவில்லை. மகளிா் மேம்பாட்டுக்கான வளா்ச்சித் திட்டமாகவே கருதுகிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.