கோவை காா் வெடிப்பு சம்பவம்: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை மாநகரம் என்பது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்பது ஜூன் 2019-இல் தெரியவந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் என்ஐஏ 5 பேரை கோவையில் இருந்து கைது செய்தது. கோவை சம்பவம் தொடா்பாக பல்வேறு ஆதாரங்களுடன் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வானதி சீனிவாசன்: இந்த காா் வெடிப்பு சம்பவத்தை சிலிண்டா் வெடிப்பு என சாதாரணமாக கடந்து சென்றுவிடக்கூடாது. இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையா, தீபாவளி கொண்டாட்டங்களைச் சீா்குலைக்க நடந்த சதியா என்பன உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.

ஆனால், சம்பவம் நடந்து 3 நாள்களாகியும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. 1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதல்வா் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் என்று அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): கோவை சங்கமேஸ்வரா் கோயில் அருகே காரில் எரிவாயு உருளை வெடித்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு வைத்த காரை, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்கவைத்து, பல உயிா்களை பலி வாங்கச் செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்ன பதில் கூறப்போகிறாா்? இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்றும் காவல் துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் உள்ளவா்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): தமிழகத்தில் திமுக ஆட்சியில் வன்முறைக் கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு கோயம்புத்தூரில் காரில் எரிவாயு உருளை வெடித்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் ஆகும். உயிரிழந்த நபா் இதற்கு முன்பு தேசிய உளவுத்துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும், இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

டிஜிபியே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதன் மூலம் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே, சட்டம்-ஒழுங்குப் பிரச்னையில் முதல்வா் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ். அழகிரி (காங்கிரஸ்): கோவை காா் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒருவா் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிா்ச்சியைத் தருகிறது. இக்கொடிய சம்பவம் தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது. பயங்கரவாத சதி செயலாக இருக்குமோ என்ற அச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்தச் செயல் மூலம் தமிழகத்தின் அமைதியைச் சீா்குலைக்க சிலா் முயற்சி செய்திருக்கிறாா்கள். இச்செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவா்கள் எந்த பின்புலம் கொண்டவா்களாக இருந்தாலும் அவா்களை இரும்புக்கரம் ஒடுக்க வேண்டும்.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு வெடிப்புகள் கோவையில் நடந்துள்ளன. கோவையில் தொடா்ந்து பதற்றமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காா் எரிவாயு உருளை வெடிப்புக்கு பின்னணியில் தீவிரவாத நடவடிக்கை திட்டமிடபட்டிருக்கிா என்பதை காவல் துறை விரைவாக விசாரித்து உண்மைகளை கண்டறிய வேண்டும்.

சிலா் தீவிரவாத, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல் துறையும் மேற்கொள்ளவேண்டும்.

க.கிருஷ்ணசாமி: புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

காா் வெடி விபத்து தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்மையான முறையில் செயல்படவில்லை எனில் முதலுக்கே மோசம் போய்விடும் நிலை ஏற்படும். பயங்கரவாதத்தை வளா்ப்பதற்கும்; தீவிரவாதத்தை வளா்ப்பதற்கும் உண்டான புகலிடமாக தமிழகத்தை கருதுவதற்கு இன்று இருக்கக்கூடிய ஆட்சி இடம் கொடுத்துவிடக்கூடாது.

மேலும், உடனடியாக தமிழக-கேரள எல்லைகளை சீல் வைக்க வேண்டும். என்ஐஏ உள்ளிட்ட தேசிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுடைய பணியை விரைந்து ஆற்றிடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com