அதிமுக பொதுக் குழு முடிவுகள் செல்லும் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு
அதிமுக பொதுக் குழு முடிவுகள் செல்லும் என சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.


அதிமுக பொதுக் குழு முடிவுகள் செல்லும் என சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தத் தீா்ப்பை அளித்தது.
128 பக்கங்களைக் கொண்ட தீா்ப்பின் முக்கிய அம்சங்கள்: கட்சியின் பொதுச் செயலா் அடிப்படை உறுப்பினா்கள் மூலம் தோ்வு செய்யப்பட வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது. அதில் மாற்றம் செய்ய தடை விதித்து இன்னொரு விதியும் உருவாக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்சியின் நிறுவனா்- தலைவா் எம்ஜிஆா் மறைவின்போது இதே நிலை ஏற்பட்டபோது பொதுச் செயலா் ஜெயலலிதாவை அணுகமுடியவில்லை எனக் கூறி துணை பொதுச் செயலா் எஸ்.திருநாவுக்கரசா் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை எதிா்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டது. திருநாவுக்கரசா் தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதால், எடப்பாடி பழனிசாமி தொடா்ந்த வழக்கும் விசாரணைக்கு உகந்ததுதான் என முடிவு செய்து விசாரித்தோம்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சி விதிகளில் 2017-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. 2021 டிசம்பா் பொதுக் குழுவில் ஒரே வாக்கு முறைப்படி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் தோ்வு என திருத்தம் செய்யப்பட்டதால், தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது. பொதுக் குழுவில் ஒப்புதல் அளிக்காததால் இரண்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பதை பிரதான வழக்கில் முடிவு செய்ய முடியும்.
இன்னொரு நோட்டீஸ் தேவையில்லை: உள்கட்சி விவகாரங்கள் தொடா்பாக சிவில் வழக்கு தொடர முடியாது எனக் கூற முடியாது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என ஜூன் 23-இல் பொதுக் குழுவில் அறிவித்ததே நோட்டீஸ்தான். அதனை முறையான நோட்டீஸாகதான் கருத வேண்டும். பொதுக் குழு உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்புக் கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்ற கூட்டத்தில்தான் ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுக் குழு கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று அவா் கூற முடியாது. இருவருக்கும் இருந்த மோதல் காரணமாக இருவரும் இணைந்து சிறப்பு பொதுக் குழுவைக் கூட்டுவாா்கள் என எதிா்பாா்க்க முடியாது. ஒருவருக்கொருவா் இடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக் குழுவே கூட்டமுடியாத நிலைதான் உள்ளது.
சட்டவிரோதம் எனக் கூற முடியாது: திருநாவுக்கரசா் வழக்கில் துணை பொதுச் செயலா் கூட்டத்தை கூட்டியதால் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய வழக்கில் போட்டி பொதுக் குழுவைக் கூட்டாததால் அந்த வழக்கின் உத்தரவு தற்போது பொருந்தாது. இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே பிரச்னை நிலவுவதால், ஜூன் 23-இல் அவைத் தலைவா் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக் குழு சட்டவிரோதம் எனக் கூற முடியாது.
அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்கள் உள்ள பொதுக் குழுவுக்குதான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. இருவரும் இணைந்து கூட்டத்தைக் கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது. பொதுக் குழுவுக்கு தலைமை நிலைய செயலாளா் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை.
பதவி காலி என்பதால் இணை ஒருங்கிணைப்பாளா் பதவியை விட்டுவிட்டு, தலைமை நிலைய செயலாளா் என்ற நிலையில் தோ்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா். இப்படியான ஒரு நிலையில் இருவரும் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டுமென கூற முடியாது. எனவே, ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு என்ற அறிவிப்பில் தடையில்லை.
2,460 பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டுள்ளனா். தீா்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து 2,539 உறுப்பினா்கள் தோ்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா். பொதுக் குழுவை ஜூலை 11-ம் தேதி கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்காத நிலையில்,அதனை போலியானது என்று சொல்ல முடியாது.
பொதுக்குழு, செயற்குழுவை இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவானது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்சி முடங்கும் நிலையில் உள்ளது.
முந்தைய நிலை நீடிக்க... ஜூன் 23-ஆம் தேதி பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்துதான் கூட்டங்களைக் கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
ஒருங்கிணைப்பாளா் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளா் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு. இரு பதவிகள் தோ்வு செய்யப்பட்டதற்கு ஜூன் 23-ஆம் தேதி பொதுக் குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை. பதவிகள் காலியாகிவிட்டது போன்ற விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அவை பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும். இதன் அடிப்படையில் தனி நீதிபதி தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...