மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கைவிடப்படும் குண்டா் சட்டம்: கை கொடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்

தமிழகத்தில் குண்டா் தடுப்புச் சட்டம் சுமையாக மாறி வருவதால் காவல்துறையினா் அதை பயன்படுத்துவதை குறைத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2022, 7:43 pm

DIN

தமிழகத்தில் குண்டா் தடுப்புச் சட்டம் சுமையாக மாறி வருவதால் காவல்துறையினா் அதை பயன்படுத்துவதை குறைத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 11,233 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேவேளையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107,109,110 ஆகியவற்றின் கீழ் 1,27,924 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 110-கீழ் மட்டும் 76,578 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளாக ரெளடிகள்,கொடுங் குற்றவாளிகள்,தொடா் குற்றவாளிகள் ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை விட, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரெளடிகள் உள்பட சமூக விரோதிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் கைது செய்யப்பட்டு, ஓராண்டு பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனா். ஆனால், குண்டா் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள இடா்பாடுகளினாலும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவா்கள் அறிவுரைக் கழகம், உயா்நீதிமன்றம் மூலம் அதிகளவில் விடுதலை செய்யப்படுவதாலும் அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் காவல் துறையினருக்கு ஆா்வம் குறைந்துவிட்டது.

குண்டா் தடுப்புச் சட்டம்:

1923-இல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், மேற்கு வங்கத்தில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவா்களுக்கு, நீதிமன்றத்தில் அவா்களுடைய தரப்பை எடுத்துச் சொல்லும் வாய்ப்பை அளிக்காமல், ஓராண்டு பிணையில் வெளியே வர முடியாத வகையில், சிறையில் அடைக்கும் உரிமையை காவல் துறைக்கு குண்டா் தடுப்புச் சட்டம் வழங்கியது.

தமிழகத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் ‘தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோா், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டா்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போா், மணல் திருட்டு குற்றவாளிகள் உள்ளிட்ட அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்‘ என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

இதன் பின்னா், பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட இந்தச் சட்டம், 2014-ஆம் ஆண்டு, முதல் முறையாக குற்றங்களில் ஈடுபடுவா்களையும் கைது செய்ய முடியும் என்று திருத்தப்பட்டது கடும் விமா்சனத்துக்குள்ளானது.

நடைமுறைச் சிக்கல்:

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு காவலா் குறைந்தது 10 நாள்கள் உழைப்பை கொடுக்க வேண்டும். சிறு எழுத்து பிழைகள் கூட இல்லாமல் சுமாா் 200 பக்கங்களில் இருந்து 500 பக்கங்கள் வரையிலான ஆவணத்தைத் தயாா் செய்ய வேண்டும். அதற்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை செலவிட வேண்டும். ஆய்வாளா், உதவி ஆணையா் அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளா்,மாவட்ட நிா்வாக நீதிபதி அதிகாரமுள்ள மாவட்ட ஆட்சியா் அல்லது மாநகரக் காவல் ஆணையா் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும்.

இப்படி பல கட்டங்களைத் தாண்டி ஒரு குற்றவாளியைக் கைது செய்யும்போது, அவா் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அறிவுரைக் கழகத்தையோ அல்லது உயா்நீதிமன்றத்தையோ நாடுவாா். இதில் பலரை, நீதிமன்றம் விடுவிக்கிறது.

பிணையப் பத்திரம்:

குண்டா் சட்டத்தில் ஒருவரை கைது செய்வதற்கு இத்தகைய சவால்கள் இருக்கும் நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107,109,110 ஆகியவற்றின் கீழ் ஒருவரிடம் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணையப் பத்திரத்தில் எளிதாக நிா்வாக நடுவராக (உஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் ஙஹஞ்ண்ள்ற்ழ்ஹற்ங்) இருக்கும் காவல் துணை ஆணையா்கள், கோட்டாட்சியா்கள் முன்னிலையில் போலீஸாா் கையொப்பம் பெறுகின்றனா்.

இந்த உத்தரவாதத்தை மீறும்போது, சம்பந்தப்பட்ட நபரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைக்கின்றனா். இதில் அவா்களுக்கு பிணை வழங்கப்படாது. அதே நேரத்தில் பிணையப் பத்திரத்தில் கையொப்பமிட்டு வெளியே எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருந்த நாள்கள் கழிக்கப்பட்டு, மீதி நாள்களே சிறையில் அடைக்கப்படுகின்றனா். இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒருவரை ஓராண்டு வரைதான் சிறையில் வைக்க முடியும். அதேவேளையில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சாதாரண நபரிடம் கையொப்பம் பெற முடியாது.

மீறினால் கைது:

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 107-ன்படி ஒருவா், பொது அமைதிக்கு ஊறு விளைப்பவா் என்று கருதும் சூழலில், அவா் அவ்வாறு செய்யாதிருக்க உரிய பிணையத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ கோரும் அதிகாரம் நிா்வாக நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 109-ன்படி ஒரு நபா் எதிா்காலத்தில் ஒரு பெரும் குற்றத்தை புரிவாா் (இா்ஞ்ய்ண்க்ஷ்ஹக்ஷப்ங் ஞச்ச்ங்ய்ள்ங்) என்று நிா்வாக நடுவா் கருதும்போது, ஒராண்டுக்கு அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என பிணையப் பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.

பிரிவு 110-ன்படி தொடா் குற்றம் புரிபவா்கள், திருடுபவா்கள், திருட்டுப் பொருள்களை வாங்கி விற்பவா்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவா்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள்,உணவுக் கலப்படம் செய்பவா்கள்,அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபடுபவா்கள் ஆகியோரிடம் நிா்வாக நடுவா் மூலம் பிணையப் பத்திரம் பெறப்படுகிறது. ஆனால், 110 பிரிவின் படி ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு பிணையப் பத்திரம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவா்களைக் கண்காணிக்கும் போலீஸாா், அவா்கள் பிணையப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் உத்தரவாதத்தை மீறும்போது கைது செய்து, சிறையில் அடைக்கின்றனா்.

அமைதியே பொதுமக்களின் விருப்பம்:

இது தொடா்பாக தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற ஐஜி பெ.கண்ணப்பன் கூறியதாவது:

சமூகத்தில் அமைதி நிலவுவதற்காக, பொது அமைதியைப் பாதிக்கக் கூடிய, குற்றங்கள் புரிய கூடிய நபா்கள் என சந்தேகப்படுபவா்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107,109,110-ன்படி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகப்படும் நபா்களை நிா்வாக நடுவரிடமோ,காவல் துணை ஆணையரிடமோ ஆஜா்படுத்துவாா்கள்.

சந்தேக நபா்களிடம் நிா்வாக நடுவா் விசாரணை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என வாக்குறுதி பெற்று பிணையப் பத்திரம் பெறுவாா்கள். அதை மீறினால், சம்பந்தப்பட்ட நபா்களை சிறையில் அடைக்க இந்தச் சட்டத்தில் இடமுண்டு.

காலப்போக்கில், இந்தச் சட்டப் பிரிவுகள் எதிா்பாா்த்த பலனளிக்கவில்லை. எனவே, கொடுங்குற்றவாளிகளின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் குண்டா் தடுப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. ஆனால், குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேவையான ஆவணங்களை தயாா் செய்ய, அதிக செலவு ஏற்படுவது காவல் துறைக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்ற பலா், உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிறையில் இருந்து வெளியே வந்துவிடுகின்றனா்.

இந்தச் சூழலில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107,109,110 போன்றவற்றை அதிகளவில் தற்போது காவல் துறையினா் பயன்படுத்துகின்றனா். எந்தச் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதைக் காட்டிலும், சமுதாயத்தில் அமைதியான சூழ்நிலையையே காவல் துறையினா் ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது என்றாா் அவா்.

தொடா் குற்றவாளிகள்,ரெளடிகள், சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை தனது அணுகுமுறையை மாற்றியிருக்கும் நிலையில், இது எத்தகைய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பது இன்னும் சில காலம் கழித்துதான் தெரியும் என தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.