கோவையில் தொடங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவியிருக்கின்றன. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் சென்னை சிட்லபாக்கம், தாம்பரம், சேலம், கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த செய்திகள் வருவதை அலட்சியப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதல்களில் மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கூட பொது சொத்துகளும், தனிநபர் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுத்து என்ன நிகழுமோ? என்பது குறித்த அச்சம் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களின் மக்களிடம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.