திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்: முதல்வர் தொடக்கி வைத்தார்

திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்: முதல்வர் தொடக்கி வைத்தார்
Published on
Updated on
2 min read

திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.9.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்கிறது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்கள் திருக்கோயில் வளாகத்திலேயே தங்கி, விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிப்பார்கள். இத்திருக்கோயில்அகத்தியர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர், ஆதிசங்கரர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோர் அருள் பெற்ற தொன்மையான திருத்தலம் ஆகும்.

2021-22 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையில் “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, முழுமையான திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உபயதாரர் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில், திருக்கோயில் உட்கட்டமைப்பு மற்றும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வு அறை ஏற்படுத்துதல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், திருக்கோயில் வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள்; திருக்கோயில் நிதி மூலமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான தங்கும் விடுதிகள், சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, திருக்கோயிலின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள், என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்று தொடக்கி வைத்தார்.

அதே போல திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா பணிகளும் இத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து நடைபெறவுள்ளது. இத்திட்டத்திற்கான தொடக்க விழா புதன்கிழமை (செப். 28) காலை சென்னை, தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. 


இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1951-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை இவ்வாறான மிகப்பெரிய திருப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப. இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., HCL நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் திருமதி ஸ்ரீமதி சிவசங்கர், திரு. சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும், திருச்செந்தூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. சண்முகையா, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ரா. கண்ணன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்  ரா. அருள்முருகன், உறுப்பினர்கள் திரு.வி. செந்தில்முருகன், அனிதா குமரன், ந. ராமதாஸ், திரு. பா. கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com