மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும்: முதல்வர் ஸ்டாலின்

மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும்: முதல்வர் ஸ்டாலின்

மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மே 1- உலகம் போற்றும் உழைப்பாளர் நாள் - மேதினி போற்றும் மேதினம். பாடுபடும் பாட்டாளிகள்  சிந்தும் வியர்வைக்கும், அவர்தம் உரிமைக்கும் உரிய நாள். தொழிலாளர் நலன் காக்கும் நன்னாள். அந்நாளை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, தொழிலாளர்களின் உரிமை காத்திடும்  உன்னத ஆட்சி நடத்தியவர் கருணாநிதி. மக்களாட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளையும் வலிமைப்படுத்திய முதல்வர் அவர்.

அந்த மே 1-இல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதுவரை ஆண்டுக்கு 4 முறை ஏனோதானோவென பெயருக்கு நடைபெற்று வந்த கிராமசபைக் கூட்டங்கள், இனி முறையாகவும் முழுமையாகவும்,  ஆண்டுக்கு 6 முறை பயனுள்ள வகையில் பாங்குடன் நடைபெறவும், அதில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் ஊர் நலனுக்கான  தீர்மானங்களை நிறைவேற்றிச் செயல்படுத்தவும், நமது அரசு விதி எண்: 110-இன்கீழ் அறிவித்துள்ளது.

பேரவையில் வெளியிடும் அறிவிப்புகள் காற்றோடு காற்றாகக் கலந்து கரைந்து விடாமல், மண்ணில் வேர் விட்டு, விண் நோக்கி வளர்ந்து வியத்தகு பலன் தரும் மரம் போல செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதுதான் நமது திராவிட மாடல் அரசின் அடிப்படை நோக்கம்.

தேசிய ஊராட்சிகள் நாளான ஏப்ரல் 24 அன்று உங்களில் ஒருவனான நான், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் செங்காடு ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்களுடன் இணைந்து மக்களாகப் பங்கேற்றேன். அண்ணா பிறந்த மாவட்டமல்லவா!

‘மக்களிடம் செல்.. மக்களோடு வாழ்’ என்று அவர் சொன்ன பொதுவாழ்வுக்கான புனித இலக்கணத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், அந்த கிராமசபைக் கூட்டத்தில் நானும், அமைச்சர் தா.மோ.அன்பரசனும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர்.பாலுவும், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையும் பங்கேற்றோம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இயக்குநர் பிரவீன் நாயர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

முதல்வர் தொடங்கி, அரசு நிர்வாகத்தினை அழகுறச் செயல்படுத்தக்கூடிய உயரதிகாரிகள் வரை, தங்கள் கிராமத்திற்கு வந்திருந்தது கண்டு மகிழ்ந்த செங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் செஞ்சுராணி கவாஸ்கரும், துணைத் தலைவர் டி.சுதாகரும் செங்காடு கிராம மக்களும் உவகையுடனும் ஆர்வத்துடனும் எங்களை வரவேற்று, தங்கள் கிராமத்திற்கான தேவைகளை தயக்கமின்றி முன்வைத்தனர்.

மக்களாட்சியில் மக்கள்தான் முதலாளிகள். அவர்களின் குரல்தான் வலிமையாகவும் அதிகமாகவும் ஒலிக்க வேண்டும். அதனால், அந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம், குறிப்பாக, தாய்மார்களிடம் மைக்கைக் கொடுக்கச் சொல்லி, அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்குமாறு கூறினேன். கோரிக்கைகளைச் சொல்வதற்கு முன்பாக, ஓராண்டுகால தி.மு.கழக அரசின் ‘திராவிட மாடல்’ நிர்வாகம் சிறப்பாக இருப்பதையும், தங்களுடைய அடிப்படைத் தேவைகள்  வரிசையாக நிறைவேறி வருவதையும் மகிழ்வுடன் தெரிவித்துவிட்டு, தங்கள் கிராமத்திற்கான கோரிக்கைகளையும், தங்களின் தனிப்பட்ட வேண்டுகோள்களையும் முன்வைத்தனர். அத்தனையும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.

நாடு போற்றும் வகையில் நல்லாட்சியை வழங்கி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, உள்ளாட்சியிலும் அதனை நடைமுறைப்படுத்தி ஊராட்சிகள்தோறும் செயல்படுத்தி வருகிறது. எப்போதெல்லாம் தி.மு.கழகம் ஆட்சி அமைகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் ஊராட்சிக் கட்டமைப்பு வலிவும் பொலிவும் பெறுவது வழக்கம். நம் உயிர்நிகர் கருணாநிதியின் ஆட்சிக்காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டதுடன், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கி அவர்கள் அதிகாரம் பெற வழிவகுத்தார். ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்திச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

கருணாநிதியின் எண்ணங்களை வண்ணமயமாகச் செயல்படுத்தும் வகையில் 2006-2011 கழக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறையின் அமைச்சராக எனக்குப் பொறுப்பினை வழங்கினார். உங்களில் ஒருவனான நான் உங்கள் ஒவ்வொருவரையும் காண்கிற வகையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து நிலையிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நேரில் சென்று அவற்றின் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்பைப் வலுப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தினேன்.

ஆட்சியில் இல்லாதபோதும், தி.மு.கழகம் உள்ளாட்சி அமைப்பின் தேவையை மறந்ததில்லை. 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோம். அன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்கள் சுயலாபத்தை மட்டுமே கணக்கிட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். 2016 முதல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மக்களாட்சியைப் பாழடித்தனர். ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.கழகம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் ஊராட்சிகள்தோறும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தியது.

‘மக்களிடம் செல்வோம்.. மக்களிடம் சொல்வோம்.. மக்கள் மனதை வெல்வோம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ஏறத்தாழ 12 ஆயிரம் ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை தி.மு.கழகம் கேட்டறிந்தது. 10 ஆண்டுகளாக ஆட்சி நிர்வாகத்தினர் எட்டிப்பார்க்காத குக்கிராமங்களையும் கட்சித் தொண்டர்கள் ஓடோடித் தேடிச் சென்றனர். மக்களை நாடிச் சென்று, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும், உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற உறுதிமொழியைக் கட்சியினர் வழங்கினர்.

தமிழ்நாட்டு மக்கள் இப்போது உங்களில் ஒருவனான என்னிடம் பெரும் நம்பிக்கையுடன் ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனாகவும், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுபவனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடைக்கோடி கிராமம்வரை மக்களாட்சியின் காற்று வீச வேண்டும். அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற இலட்சியத்துடன் செயலாற்றுகிறது நமது திராவிட மாடல் அரசு.

அரசின் திட்டங்கள் என்றால் தலைமைச் செயலகத்திலிருந்து ஆணை வரவேண்டும். தலைமைச் செயலகத்திலிருந்து நிதி வர வேண்டும். திட்டங்களின் நிலை என்ன என்பதைத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளவேண்டும் அல்லது ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டும்  என்று ஊர்ப்புறங்களில் உள்ள மக்கள் நினைப்பது வழக்கம். அப்படிப்பட்ட நிலையைப் பெருமளவுக்கு மாற்றியிருக்கிறது டிஜிட்டல் உலகம். ஆன்லைன் வசதிகள் மூலமே தங்களுடைய இருப்பிடத்திலிருந்து ‘முதல்வரின் முகவரி’யைப் பயன்படுத்தி, தலைமைச் செயலகத்திற்கு மனு அனுப்பி, உடனடியாகப் பதில் பெற முடியும், கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நிலையை அடைந்திருக்கிறோம்.

தற்போது அதனையும் கடந்து, ஊராட்சி மன்றங்களின் அலுவல்பணிகள் விரைவாகவும் விரிவாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக தலைமைச் செயலகம் போல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல, கிராமச் செயலகத்தை நமது அரசு ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கிட இருக்கிறது. ஊராட்சி அளவிலான அனைத்துத் துறைகளின் பணிகளையும் ஒருங்கிணைத்து, அரசின் சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் எளிதாகக் கிடைத்திடும் வகையில் இந்த கிராமச் செயலகங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும். அத்துடன், அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளுக்கும், அமர்வுப்படி 5 முதல் 10 மடங்கு உயர்த்தப்பட்டு, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆண்டுதோறும் நவம்பர் ஒன்றாம் தேதி, உள்ளாட்சிகளின் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு, சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு ‘உத்தமர் காந்தி விருது’ வழங்கப்படும் என்பதையும் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் உங்களில் ஒருவனான நான் அறிவித்துள்ளேன். நம் உயிர்நிகர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறைக்குப் பொறுப்பு வகித்தபோது, சிறந்த ஊராட்சிகளுக்கு இந்த விருதினை வழங்கி மகிழ்ந்தது என் நெஞ்சில் இன்றும் நிழலாடுகிறது.

பத்தாண்டுகாலம் மொத்த தமிழ்நாடும் இருட்டில் தள்ளப்பட்ட நிலையில், 2021-இல் ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் புதிய வெளிச்சம் பரவத் தொடங்கியது. அதில் குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை முழுமையாக நடத்தியதால், மக்களாட்சி ஒளி ஒவ்வொரு கிராமத்திலும் ஊடுருவியுள்ளது.

அந்த ஒளி எல்லா நிலையிலும் பரவி நிலைத்திட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்கிற திராவிட மாடலின்படி அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். 50 விழுக்காட்டிற்கு மேல் பெண்கள் பங்கேற்றுள்ள உள்ளாட்சி அமைப்பு என்பதால், வீட்டைப் போல நாட்டையும் அவர்கள் செழிக்கச் செய்திடுவார்கள் என்கிற நம்பிக்கை என்னுள் நிரம்பியிருக்கிறது.

மாநகராட்சி தொடங்கி ஊராட்சிகள் வரையிலான பொறுப்புகளில் தி.மு.கழகம் ஏறத்தாழ 90 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் சற்றொப்ப 5 விழுக்காடு அளவில் இருக்கிறார்கள். நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி வேறுபாடுகளுக்கு இடம் கிடையாது. எல்லாரும் தமிழ்நாட்டினுடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தான். முந்தைய ஆட்சியாளர்கள் போல எதிர்க்கட்சிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, திட்டங்களைக் கிடப்பில் போடுவது போன்ற காழ்ப்புணர்வு ஓரவஞ்சனைச் செயல்பாடுகள் திமுக அரசில் நிச்சயம் இருக்காது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சி நிர்வாகங்களில் எந்தக் கட்சி இருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியினை வழங்கிடும் பொறுப்பினை உங்களில் ஒருவனான நான் ஏற்றிருக்கிறேன். ஒவ்வொரு கிராமமும் என் கிராமம்தான். ஒவ்வொரு தமிழரும் என் உறவுதான்.

மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும்! மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com