தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லும்?

பயணிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, சென்னை - மதுரை இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பயணிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, சென்னை - மதுரை இடையே செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் விரைவில் தாம்பரத்தில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக, அனுமதி கேட்டு ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது.

சென்னை - மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவேக விரைவு ரயில் கடந்த 2019 மார்ச் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. வெறும் ஆறரை மணி நேரப் பயணம் என்பதால் மக்களிடம் இந்த ரயிலுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.15 மணிக்கு மதுரை சென்றடைகிறது. எதிர் தடத்தில், மதுரையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் வருகிறது.  

சென்னை - மதுரை இடையே திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கிறது. இதனால் தாம்பரம் பகுதியில் வசிப்பவர்கள் ரயிலில் ஏற எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. 

இந்நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை ஒரு நிமிடம் நிறுத்த வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பயணிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும், இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், கூடுதல் நிறுத்தங்களைச் சேர்த்தால் ரயிலின் வேகம் குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்த நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து மதுரை எம்.பி.க்கும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

இதனால் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com