ஸ்டாலின் நகர்வுகள்; மோடியின் வியூகம்!

சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உடல் மொழிகள் மிகவும் நெருக்கமாகவே காணப்பட்டன.
ஸ்டாலின் நகர்வுகள்; மோடியின் வியூகம்!

சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உடல் மொழிகள் மிகவும் நெருக்கமாகவே காணப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் காட்டிய உடல் மொழிக்கும், ஒலிம்பியாட் தொடக்க விழாவில் காட்டிய உடல் மொழிக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
 வழக்கத்துக்கும் மாறாக முதல்வர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி கொடுத்த முக்கியத்துவம் தமிழக அரசியல் கட்சிகளையும், அரசியல் நோக்கர்களையும் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது. பாஜகவும், திமுகவும் நேர் எதிர்கொள்கையில் இருக்கும்போது எதற்காக மோடி-ஸ்டாலின் நெருக்கம் காட்டுகின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 மோடியின் நகர்வு என்ன? பிரதமர் மோடியைப் பொருத்தவரை, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த வகையில் லாபம் பெற முடியும்?, தங்களது அரசியல் எதிரியான காங்கிரஸின் பலத்தை எப்படிக் குறைக்க முடியும்? ஆகிய இரண்டு அரசியல் புள்ளிகளை வைத்துத்தான் தனது வியூகத்தை அமைத்து நகர்வுகளைச் செய்து வருகிறார். மோடியைப் பொருத்தவரை, 2014 மக்களவைத் தேர்தல் அடிப்படையில்தான் 2024 மக்களவைத் தேர்தலையும் அணுகுகிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பிரதான கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டபோது காங்கிரஸ் தனித்து 4.3 சதவீத வாக்குகளையும், பாமக, தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளை மட்டுமே பாஜக சேர்த்துக் கொண்டு 5.5 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த 2016 பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத்தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 8 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் என பாஜகவைவிட தமிழகத்தில் தேர்தல் ரீதியாக அதிக பலத்தை காங்கிரஸ் பெற்று வருகிறது.
 தமிழகத்தில் இருமுனைப் போட்டியில் 13 சதவீத சிறுபான்மை வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் திமுக அணிக்கு கிடைக்க கிரியா ஊக்கியாக காங்கிரஸ் இருப்பதால்தான் அந்தக் கட்சியை திமுக தூக்கிச் சுமக்கிறது என்பதைப் பிரதமர் மோடி உணர்ந்துள்ளார்.
 2019 மக்களவைத் தேர்தலின்போது ஆட்சியில் இருந்த அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பலமான அணியை பாஜக கட்டமைத்தபோதும்கூட தேனி மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மாறாக, 2014 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணியுடன் பாஜக களமிறங்கியபோது தமிழகத்தில் 2 மக்களவைத் தொகுதிகள் அந்தக் கூட்டணிக்கு கிடைத்தன. எனவே, பலமுனைப் போட்டியை உருவாக்குவதே பாஜகவுக்கு சாதகம் என்பது மோடியின் வியூகமாக இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 அரசியல் சூழல் அடிப்படையில்...: தமிழகத்தில் இப்போதைய அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக இரு அணிகளாக உருவாகியுள்ள நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தேவை திமுகவுக்கு குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது. எனவே, காங்கிரஸுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறையுமா அல்லது அந்தக் கட்சியைத் தவிர்த்துவிட்டு இதர கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் இறங்குமா என்பது தேர்தல் நெருங்கும்போது உருவாகும் அரசியல் சூழல்தான் தீர்மானிக்கும்.
 தேசிய அளவில் காங்கிரஸுக்கான முக்கியத்துவம் சரிந்துகொண்டே வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் மோடியே பிரதமராகும் அரசியல் சூழல் தொடர்ந்து நிலவி வருவதால் காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளே பாஜகவை எதிர்க்க தயக்கம் காட்டி வருகின்றன. இதையெல்லாம் உற்றுநோக்கி வருவதால், பிரதமர் மோடி மீதான எதிர்ப்பை முதல்வர் ஸ்டாலினும் குறைக்கத் தொடங்கியுள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 பாஜக-திமுக கூட்டணி சாத்தியமா? மோடி- ஸ்டாலின் உடல்மொழி நெருக்கத்தைப் பார்க்கும்போது திமுக-பாஜக கூட்டணி உருவாகலாம் என்ற கருத்து எழுந்தாலும், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். எந்த ஓர் அரசியல் கட்சியும் வெற்றிக் கூட்டணியில் தொடரவே விரும்பும். தமிழகத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால் 1971, 1980, 2004, 2009, 2019 மக்களவைத் தேர்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே இருந்துள்ளது. அதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடரவே அதிக வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டணியைத் தொடரவே திமுகவும் விரும்பும்.
 1980, 1984 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸை கருணாநிதியும், எம்ஜிஆரும் மாறிமாறி ஆதரித்தார்கள். காங்கிரஸுக்கு 23 தொகுதிகளை திமுகவும், 27 தொகுதிகளை அதிமுகவும் ஒதுக்கியது என்றால் தமிழகத்தில் இந்திரா காந்திக்கு இருந்த செல்வாக்குதான் காரணம். நாடு முழுவதும் மோடி செல்வாக்குடன் இருந்தாலும் தமிழகத்தில் இதுவரை மோடி தலைமையில் பாஜகவால் வெற்றியை ஈட்ட முடியவில்லை.
 1998 மக்களவைத் தேர்தலில் வாஜ்பாயை பயன்படுத்தி திமுகவை ஜெயலலிதா தோற்கடித்துக் காட்டியதால்தான், 1999 மக்களவைத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க பிரதமர் வேட்பாளராக வாஜ்பாயை முன்னிறுத்தி திமுக-பாஜக கூட்டணி உருவாகி வெற்றிக் கூட்டணியானது.
 திமுக - பாஜக இருவேறு கொள்கையுடைய வாக்குகளைக் கொண்ட கட்சி என்பதால், 2001 பேரவைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி எலி-தவளை நட்பாக மாறி படுதோல்வியையே சந்தித்தது. இவையெல்லாம் ஏற்கெனவே ஸ்டாலினுக்கு அனுபவ பாடமாக இருப்பதால், திமுக-பாஜக கூட்டணி என்பது 2024 மக்களவைத்தேர்தலில் சாத்தியமற்றது என்பது தெளிவாகிறது.
 அதே நேரத்தில், மத்திய ஆளுங்கட்சியான பாஜகவையோ, தேசிய அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவரான பிரதமர் நரேந்திர மோடியையோ பகைத்துக் கொள்ளவும் திமுக தயாராக இல்லை. தமிழகத்தின் நிதிநிலைமை தள்ளாடுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பும் ஊழல் குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் நடைபெறும் அமலாக்கத் துறை நடவடிக்கைகள், திமுகவை எச்சரிக்கையாக இருக்கத் தூண்டுவது இயல்பு.
 பிரதமரைப் பகைத்துக் கொள்ளவும் கூடாது; அதே நேரத்தில், பாஜக எதிர்ப்பை முன்வைத்து சிறுபான்மையினர் வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டமாக இருக்கும். ராகுல் காந்தியை முன்னிறுத்தி 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்தால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை உறுதிப்படுத்த முடியும் என்பதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றாகவேத் தெரியும். காங்கிரஸுக்கு திமுகவை கைவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும்.
 முதல்வருக்குத் தெரிந்ததெல்லாம் பிரதமருக்கும் தெரியும். ஆனால், அதைவிட சற்றுக் கூடுதலாகவே தெரியும். அதனால்தான் மோடியின் வியூகங்களைக் கூர்ந்து கவனிக்கத் தோன்றுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com