திருப்பூரில் நாளை தொடங்குகிறது இந்திய கம்யூ. மாநில மாநாடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் நாளை சனிக்கிழமை (ஆக.6) தொடங்குகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  
திருப்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், நிர்வாகிகள் ஆறுமுகம், சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.
திருப்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், நிர்வாகிகள் ஆறுமுகம், சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் நாளை சனிக்கிழமை (ஆக.6) தொடங்குகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
 
திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரையில் 4 நாள்கள் நடைபெறுகிறது. 

இதில், சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு ஏற்றித் தொடக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் நடைபெறும் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டுக்கும் அவர் தலைமை வகிக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடக்கவுரையாற்றுகிறார். இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.என்.காதர் மொகிதீன், கொ.ம.தே.க.பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். 

இந்த மாநாட்டின் 2 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அறிக்கைகளின் மீதான விவாதமும், கருத்தரங்கமும் நடைபெற்றுகிறது. மாநாட்டின் 3 ஆவது நாளான திங்கள்கிழமை அறிக்கைகள் மீதான தொகுப்புரை, கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை, மாநிலக்குழு, கட்டுப்பாட்டுக்குழு தேர்வு, தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 

மாநாட்டின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையங்கம் அருகில் இருந்து தொடங்கும் செம்படைப் பேரணியானது காங்கயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நிறைவடைகிறது. 

இந்தப் பேரணியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வாக பத்மினி கார்டன் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்துக்கு திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமை வகிக்கிறார். இதில், பொதுச் செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, அமர்ஜீத் கவுர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகின்றனர். 

இந்த மாநாட்டில் நூல் விலை உயர்வு, விசைத்தறி, ஜவுளி தொழிலாளர்களின் பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com