
மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100 பேர் திருப்பூர் வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் தலைமை ஏற்றார்.
இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.
தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 12 பெண்கள் உள்பட 100 பேரை திருப்பூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை காரணமாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.