அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து ஓபிஎஸ் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க | ஓபிஎஸ் வீட்டின் முன்பாக திரண்ட தொண்டர்கள் (படங்கள்)
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன்பாக திரண்ட அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இபிஎஸ் தேர்வு செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு