
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தகவலில்,
தமிழ்நாட்டில் நவ.29. முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 05-12-2022 வரை 366.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் (376.0 மி.மீ.) காட்டிலும் 3 விழுக்காடு குறைவு ஆகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம், தனது அறிவிக்கையில்,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 06-12-2022 அன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 08-12-2022 அன்று காலை வடதமிழக கடலோரப் பகுதியின் அருகில் வந்தடையக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கன மற்றும் மிக கனமழைப்பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
07-12-2022 - கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
08-12-2022 - திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். மேற்சொன்ன மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09-12-2022 - திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதில்;
கனமழையினை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.