புயல், கனமழை குறித்து மக்கள் அறிந்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

கனமழை, தரைக்காற்று வேகம் உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்கிறது.
புயல், கனமழை குறித்து மக்கள் அறிந்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு
புயல், கனமழை குறித்து மக்கள் அறிந்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் “மாண்டஸ்”  புயல் சின்னம் காரணமாக - கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று (08.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த “மாண்டஸ்” புயலானது மேலும் வலுவடைந்து தீவிர புயலானது. இது இன்று காலை வலுவிழந்து புயலாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ­ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கனமழை, தரைக்காற்று வேகம் உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்கிறது.

09-12-2022 அன்று புயல் கரையைக் கடக்கும் போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின் படி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“மாண்டஸ்” புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் 8-12-2022 அன்று பல்வேறு துறை அலுவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக 58.47 லட்சம் நபர்களது செல்பேசிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் என்ஸ்மார்ட் (TNSMART) செயலி மூலமாகவும், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 512 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு புயல்  குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com