
குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் (18 தொகுதி) வென்றிருந்தால்தான் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கோர முடியும். ஆனால், கிடைத்திருப்பதோ 17 தொகுதிகள்.
நவம்பர் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, குஜராத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. அப்போது, தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தை அளவிடும் வகையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு நேரத்தைக் குறிக்கும் கடிகாரம் வைக்கப்பட்டது. சரியாக பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது, அந்த கடிகாரத்தில் அளவிடும் நேரம் நின்றது. அப்படி நின்றுபோயிருந்த கடிகாரத்தைப் பார்த்த சில காங்கிரஸ் தொண்டர்கள் அதனை அடித்து உடைத்திருந்தனர்.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
ஏன் அந்த கடிகாரத்தின் மீது அவ்வளவு கோபம். கடந்த 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றி, இமாலய வெற்றியைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட கோர முடியாமல் சுருங்கி 17 ஆக ஆனதால் எழுந்த அதிருப்தியே காரணம்.
பாஜக வெற்றி
குஜராத் பேரவைத் தேர்தலில் 156 தொகுதிகளில் வென்று வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கவிருக்கிறது.
குஜராத்தில் இரு கட்டமாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதையும் படிக்க.. வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!
குஜராத்தில் ஆரம்பத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸும் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜகவின் கைதான் ஓங்கியது. காங்கிரஸ் முன்னிலை வகித்த தொகுதிகள் மளமளவென சரிந்தன.
பிறகு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இமாலய வெற்றி, மகத்தான வெற்றி என பல மகுடங்களை சூடிக்கொண்டது.
குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை. இதற்கு முன் ஏற்கனவே சொன்னது போல காங்கிரஸ் கட்சி 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்து வந்தது.
இதையும் படிக்க.. தென்காசிக்கு ஸ்டாலின் பயணித்த 'சலூன் கோச்': மக்கள் பயணிக்க முடியுமா?
இந்த வெற்றியின் மூலமாக தனது முந்தைய சாதனையையும் பாஜக முறியடித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு தோ்தலில் 127 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்ததே பாஜகவின் தனிப்பட்ட சாதனையாக இருந்தது. தனது சாதனையையும், அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் சாதனையையும் முறியடித்துள்ளது பாஜக.
தோ்தலில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலில் 77 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மாநில மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே இது காட்டுவதாக ஒரு பக்கம் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த தேர்தல் முடிவு மூலம், தேர்தலில் இருமுனைப் போட்டி என்ற நிலையிலிருந்து குஜராத் மாநிலம் வெளியேறியிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த கேரளம், பாஜக ஆளும் உத்தரகண்ட், அசாம், கோவா மாநிலங்களைப் போல குஜராத் மாநிலமும் மாறியிருக்கிறது.
தீவிர அரசியிலிலிருந்து சில காலம் ராகுல் விலகியிருந்ததும், ஒருமுறைக்கும் மேலாக, தனக்கு அரசியல் பதவிகளில் ஆர்வம் இல்லை என்று ராகுல் கூறியிருந்தது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு எவ்வாறு தளர்ச்சியை ஏற்படுத்தியதோ, அதுபோல வாக்காளர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கலாம் என்பதே இந்த தோல்வியல்ல தோல்விக்கும் மேல் என்ற நிலைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.