மஸ்தான் கொலைக்கு முன் முக்கிய குற்றவாளி பார்த்த கொலை விடியோக்கள்

முக்கிய குற்றவாளி ஏராளமான கொலை செய்யும் விடியோக்களைப் பார்த்திருப்பது தெரிய வந்துள்ளது.
மஸ்தான் கொலைக்கு முன் முக்கிய குற்றவாளி பார்த்த கொலை விடியோக்கள்
மஸ்தான் கொலைக்கு முன் முக்கிய குற்றவாளி பார்த்த கொலை விடியோக்கள்


சென்னை: முன்னாள் எம்.பி. மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையின் மூலம் தெரிய வந்த நிலையில், முக்கிய குற்றவாளி ஏராளமான கொலை செய்யும் விடியோக்களைப் பார்த்திருப்பது தெரிய வந்துள்ளது.

மஸ்தானுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை நடந்து ஒரு வார காலத்துக்குள் பல்வேறு வகையிலான விசாரணைகளை ஒருங்கிணைத்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர், சிசிடிவி காட்சிப் பதிவுகள் உள்பட பல ஆதாரங்களையும் திரட்டியுள்ளனர்.

இதில், கொலை செய்யப்பட்ட மஸ்தானின் இளைய சகோதரரின் மருமகன் இம்ரான் பாஷா, கொலைக்கு மூளையாக இருந்திருப்பதும், சந்தேகம் வராமல், கொலை செய்வது எப்படி என்பது தொடர்பாக ஏராளமான விடியோக்களை பார்த்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு, திருவல்லிக்கேணி முதல் செங்கல்பட்டு வரை 65 கிலோ மீட்டர் தொலைவு, கார் பயணித்த வழித்தடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், மஸ்தான் பயணித்த காருடன் மேலும் ஒரு கார் திருவல்லிக்கேணியிலிருந்து செங்கல்பட்டு வரை பின்தொடர்ந்து சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர். எனவே, இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து, அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி, ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம்
தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்தவா் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டா் மஸ்தான். இவா், சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, வலிப்பு ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மாரடைப்பால் கடந்த 21-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், டாக்டா் மஸ்தான் மரணத்தில் மா்மம் இருக்கலாம் என்று அவரின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்

அதன் பேரில், போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், காரில் சென்ற உறவினரான இம்ரான் பாஷா, தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து காரை தனியாக ஓரிடத்தில் நிறுத்தி, மஸ்தானுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இம்ரான் பாஷாவின் கைப்பேசி உரையாடல்கள், அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்தது இம்ரான் பாஷா ஒப்புக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, கொலைக்கு உடந்தையாக இம்ரான் பாஷாவின் கூட்டாளிகள் தமீம், நஷீா், தெளபீக் அகமது, லோகேஸ்வரன் மற்றும் இம்ரான் பாஷா ஆகிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தொடா் விசாரணையில், டாக்டா் மஸ்தானிடம் இம்ரான் பாஷா கடனாகப் பெற்ற ரூ.15 லட்சத்தைத் திரும்பக் கேட்டு அவா் தொந்தரவு செய்ததால், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து செங்கல்பட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் பெற்றுத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, காரை நிறுத்தி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com