எதிர்க்கட்சிகளின் கலாட்டா தோல்வியின் வெளிப்பாடு: துரைமுருகன் குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நிலவும் வெற்றி பிரகாசத்தை மங்கச்செய்திட வேண்டும் என்றெண்ணி எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் கலாட்டாக்கள் தோல்வியின் வெளிப்பாடு என்று துரைமுருகன் தெரிவித்தார
காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ பள்ளி வாக்குச்சாவடியில் சனிக்கிழமை காலை வாக்குப்பதிவு செய்த அமைச்சர் துரைமுருகன். 
காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ பள்ளி வாக்குச்சாவடியில் சனிக்கிழமை காலை வாக்குப்பதிவு செய்த அமைச்சர் துரைமுருகன். 

வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நிலவும் வெற்றி பிரகாசத்தை மங்கச்செய்திட வேண்டும் என்றெண்ணி எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் கலாட்டாக்கள் தோல்வியின் வெளிப்பாடு என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலருமான துரைமுருகன் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ பள்ளி வாக்குச்சாவடியில் துரைமுருகன் சனிக்கிழமை காலை வாக்குப்பதிவு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. எனினும், இந்த வெற்றி பிரகாசத்தை மங்கச்செய்திட வேண்டும் என்றெண்ணி எதிர்க்கட்சிகள் கலாட்டா செய்து வருகின்றன. இது அவர்களின் தோல்வியின் வெளிப்பாடாகும். அதேசமயம், தமிழகம் முழுவதும் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றும் என்பதில் திடமான நம்பிக்கை உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று கேரளம் ஆளுநர் கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு முரணானது. தற்போதுள்ள அணை பலமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் வழியாக இத்தகைய முடிவைத் தெரிவிப்பது அம்மாநில அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. 

கேரளம் அரசின் நிலைப்பாட்டைவிட ஆயிரம் மடங்கு உறுதியாக இருந்து தமிழக திமுக அரசு புதிய அணைகட்ட விடாமல் தடுக்கும்.

இஸ்லாமியர்களுக்கோ, இந்துக்களுக்கோ எதிராக பேசுபவன் நானில்லை. அவ்வாறு பேசியதாகக் கூறி சிலர் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து திமுக அராஜகம் செய்வதாக குற்றம்சாட்டி கோவையில் நீண்டகாலம் அமைச்சராக இருந்தவர்கூட (வேலுமணி) ஆட்சியர் அலுவலகம் முன்னால் விளைவுகளை ஏற்படுத்தியிருப்பது நல்லதல்ல. அங்கு அதிமுக எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டனர். அதை முறியடித்து விட்டோம் என்ற ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று துறைமுருகன் கூறினார். 

அப்போது, வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com