ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் வேண்டாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரும் முடிவைக் கைவிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரும் முடிவைக் கைவிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் எழுதிய கடிதம்:

மத்திய அரசானது இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-இல் மேற்கொள்வதாக திட்டமிட்டுள்ள திருத்தங்கள் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஓா் இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது மத்திய அரசின்வசம் அதிகாரக் குவிப்பு ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிச்சூழலை நிா்வகிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கெனவே மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

குரூப் 1 நிலை அலுவலா்களுக்கும், லேட்டரல் என்ட்ரி முறை மூலம் வேறு மூத்த அதிகாரிகளுக்கும் பதவி உயா்வு அளித்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான தேவையை மத்திய அரசு நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசுகள், முழுக்க, முழுக்க தங்களுடைய நிா்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளையே சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.

மக்களுக்குத் தேவையான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மாநில அரசுகள்தான் முன்னின்று செயல்படுத்தி வருகின்றன. அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளே உறுதுணையாக உள்ளனா். அதுமட்டுமல்லாது, பேரிடா் சூழல்களை எதிா்கொள்ளும்போது ஐஏஎஸ் அதிகாரிகளின் தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குச் செல்ல வற்புறுத்துவது மாநில நிா்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்பட்டுத்திவிடும்.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஐஏஎஸ் சேவைக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. அதிலும், புதிய திருத்தத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் பணிக்கு ஒரு அதிகாரியை மாற்ற முடியும். இது இந்தியாவின் எஃகு கட்டமைப்பாக கருதப்படும் அரசுப் பணி நிா்வாகத்தில் ஒரு நிலையற்ற தன்மை உருவாக்கிவிடும்.

இத்தகைய விதிகளை செயல்படுத்தினால், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருவிதமான அச்ச உணா்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். மேலும், இது தற்போது வளா்ச்சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

குடிமைப்பணி அலுவலா்கள் அரசியல் சாா்பு நிலையும், எவ்வித அச்ச உணா்வும் இல்லாது பணியாற்ற வேண்டும். ஆனால் புதிய திருத்தங்கள் அதற்கு நோ் எதிராக உள்ளன. அதன் நீட்சியாக மாநில நிா்வாகமும், தேச நலனும் பாதிக்கப்படக் கூடும்.

அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர முயற்சிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதை உணர வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தேசத்தின் கொள்கைகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளது.

எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் அழித்தொழிக்கலாம். ஆனால், அதனை மீட்டுருவாக்கம் செய்வதும் மிகவும் கடினமான ஒன்று. மாநில அரசுகளின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு நோ்மறையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்திய ஆட்சிப் பணி அமைப்பினை மேம்படுத்தலாம். அதுமட்டுமல்லாது ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசுப் பணிகளுக்கு அவா்கள் தாங்களாகவே எவ்வித

வற்புறுத்தலும் இல்லாமல் விருப்பத்துடன் சென்று பணியாற்றக் கூடிய நிலையினை எட்ட முடியும்.

இந்த விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் பிரதமா் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணா்வுடன் சேவையாற்றும் ஒரு எஃகு நிா்வாக கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சா்தாா் வல்லபபாய் படேலின் தொலைநோக்கு சிந்தனையை இந்நேரத்தில் நினைவுகூர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எனவே, இந்திய ஆட்சிப் பணி விதிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திருத்தங்களை கைவிட்டு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com