தலைவர்கள் மறைந்தால்தான் பதவிகள் காலியாகும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்

இரு பதவிகளும் காலியாக உள்ளதாக வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் (கோப்புப் படம்)
ஓ.பன்னீர்செல்வம் (கோப்புப் படம்)


சென்னை: கட்சியின் தலைவர்கள் மறைந்தால்தான் பதவி காலியாகும். எனவே, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகளும் காலியாக உள்ளதாக வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை நேற்று விசாரித்து, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மிக நீண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்களது வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் தொடங்கியுள்ளன.

அவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, அதிமுக கட்சியைப் பொறுத்தவரை தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலி என்ற நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை 1987 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இறந்த போது என்ன நடந்தது என்பது குறித்த விளக்கம் பதில் மனுவில் இல்லை. எனவே இரு பதவிகளும் காலியாக உள்ளதாக வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

அதிமுக கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. அது ஒரு நடைமுறை அவ்வளவே.  பொதுக் குழுவில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படாத நிலையில் எப்படி பதவிகள் காலியாகும்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பொதுக் குழுவில் ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகளும் காலி என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com