அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்:  நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்

ஓ.பன்னீர்செல்வத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் மன்னிக்காது. அவர் அரசியல் அநாதை ஆகிவிட்டார்  என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். 
அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்:  நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்

ஓ.பன்னீர்செல்வத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் மன்னிக்காது. அவர் அரசியல் அநாதை ஆகிவிட்டார்  என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். 

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் முதலில் அதிமுக செயற்குழு கூடியது. 300-க்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய 16 தீர்மானங்களையும் மூத்த தலைவர் பொன்னையன் முன்மொழிந்தார். 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயற்குழு நிறைவு பெற்றது.

இதனைத்தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு தொடங்கியது. 

பொதுக்குழுவில் அதிமுகவின் கழக சட்டவிதி 20 அ பிரிவு 7ன்படி கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அதிமுகவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். 

அப்போது, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், சீப்பை மறைத்துவைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என நினைப்பவர்களின் சூழ்ச்சியை முறியடித்து பொதுக்குழு நடைபெற்று வருகிறது. 

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தற்போது நமக்கெல்லாம் மூன்றாவதாக ஒரு தலைவர் கிடைத்துள்ளார்.

திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கும் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை சரியாக வழி நடத்த ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அதிமுகவுக்கு பொற்காலம் தான். 

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி உருவாக்குவார். 

ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு கொடூரமான முகம் ஒன்றுள்ளது. அவரது பேச்சுக்கும், செயலுக்கும் சம்மந்தமே இருக்காது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர். அதிமுகவுடனான அவரது உறவு முறிந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னையே நம்பாதவர் ஒருவர் ஓபிஎஸ். அவர் யாரையும் வாழ விடமாட்டார். பொறாமை, சூழ்ச்சி, துரோகம் செய்பவர். அவரை என் முகத்திலே முழிக்காதே, போ என ஜெயலலிதாவால் துரத்தப்பட்டவர் தான் ஓபிஎஸ். ஆறு மாதம் பன்னீர்செல்வத்துடன் பேசாமல் இருந்தார் ஜெயலலிதா. 

பன்னீர்செல்வம் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் மன்னிக்காது. அவர் அரசியல் அநாதை ஆகிவிட்டார். அவரது வீழ்ச்சிக்கு அவரே தான் காரணம். அவர் ஒரு துரோகி. அவரை ஒருநாளும் மன்னிக்க முடியாது. அவரது கதை இன்றுடன் முடிந்தது என விஸ்வநாதன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com