அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் முதலில் அதிமுக செயற்குழு கூடியது. 300-க்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய 16 தீர்மானங்களையும் மூத்த தலைவர் பொன்னையன் முன்மொழிந்தார். 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயற்குழு நிறைவு பெற்றது.

பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக பொதுக்குழு நடைபெறும் வானகரம் வருவதற்காக காலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி சுமார் 2 மணி நேரம் பயணித்து வானகரம் வந்தடைந்தார். 

அவருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுக்குழு மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவபடங்களுக்கு மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. 

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே வானகரம் பொதுக்குழு மண்டபத்தில் மேடை ஏறினார் எடப்பாடி பழனிசாமி. 

அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்காக தமிழ்மகன் உசேன் அருகில் நாற்காலி போடப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து அதிமுக தலைமை அலுவலத்தில் இருந்து வருகிறார். 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு தொடங்கியது. பொதுக்குழு மேடைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்த நிலையில், வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் என்ற பாடல் ஒலித்தது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

பொதுக்குழுவில் அதிமுகவின் கழக சட்டவிதி 20 அ பிரிவு 7ன்படி கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அதிமுகவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீர்மானங்கள் விவரம்: 

* அதிமுக செயற்குழுவில் பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 
* அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி  பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
* அதிமுக நிரந்த பொதுச்செயலாளர் பதிவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

* அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கு வழங்க சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

* அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.

இரட்டைத் தலைமையால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக முடிவு எடுப்பதில் சங்கடம், தாமதம் ஏற்பட்டது. அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை என முன்மொழியப்பட்டுள்ளது. அதிமுக நிலைத்து நிற்க, மீண்டும் ஆட்சிக்கு வர வலிமையான ஒற்றைத் தலைமை தேவை. திமுக அரசை வலிமையுடன் எதிர்கொள்ள ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பதவி துணை பொதுச்செயலாளராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

* அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

* நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

* அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

* துணை பொதுச் செயலாளரை பொதுச்செயலாளரே நியமனம் செய்வார். அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்று முதல் நீக்கப்பட்டது. 

* அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி மாற்றத்தக்கதல்ல.

* பொதுச் செயலாளருக்கான அதிகாரம் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com