சசிகலா குடும்பத்தினரைத் தவிர்க்கும் உத்தியா?

சசிகலாவும் குடும்பத்தினரும் அதிமுகவுக்குள் நுழைந்துவிடவோ, பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடவோ கூடாது எனத் தடுக்கும் நோக்கில்தான் தேர்தல் விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்...
எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும் எந்த வகையிலும் அதிமுகவுக்குள் நுழைந்துவிடவோ, பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடவோ கூடாது எனத் தடுக்கும் நோக்கில்தான் தேர்தல் விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில்  திங்கள்கிழமை பரபரப்புடன் நடைபெற்று முடிந்தது.

செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டுவருதல், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தல் உள்ளிட்ட 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூடுதலாக, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, கட்சியின் பொதுச் செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை பொதுச் செயலாளரைப் பொதுச்செயலாளரே நியமனம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோருக்கான கட்சியின் விதி-20அ பிரிவு-1இல் முக்கிய திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விதியில், கட்சி ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்பாக, தொடர்ந்து 5 ஆண்டுகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலே போதும் என நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிடுவோர் தொடர்ந்து 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராகவும், தலைமைக் கழக அளவில் பொறுப்பாளராக 5 ஆண்டுகளும் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் நேற்று மாலையே அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்ததால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தக் காரணம்கொண்டும் கட்சியின் முக்கிய பதவியான பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத் தக்கது.

பிற்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே இபிஎஸ் தரப்பினர் சட்ட விதிகளில் முக்கிய திருத்தங்களைக் கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com