தவத்திரு ஊரன் அடிகளார் சித்தி அடைந்தார்!

சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் தவத்திரு ஊரன் அடிகளார்(90) உடல்நலக்குறைவால் குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்.
தவத்திரு ஊரன் அடிகளார்
தவத்திரு ஊரன் அடிகளார்


வடலூர்: சன்மார்க்க சொற்பொழிவாளர் தவத்திரு ஊரன் அடிகளார் (குப்புசாமி) உடல்நலக்குறைவால் புதன்கிழமை குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்.  

திருச்சி மாவட்டம், சமயபுரம், கண்ணனூர் அடுத்துள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் ராமசாமி பிள்ளை-நாதரத்தினம் தம்பதிக்கு மூத்த மகனாக குப்புசாமி(ஊரன் அடிகளார்) 22.5.1933-இல் பிறந்தார்.

கண்ணூரில் தொடக்க கல்வி, ஶ்ரீரங்கத்தில் உயர்நிலைக்கல்வி, திருச்சியில் கல்லூரி கல்வியும் பெற்றார். பின்னர் 1955 முதல் பொதுப்பணித்துறையில் நகர் அமைப்பு ஆய்வாளராக ஸ்ரீரங்கம், திருச்சி, வேலூர் நகராட்சிகளில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர், ஞானமார்க்க ஆர்வத்தால் பணியை ராஜிநாமா செய்துவிட்டு துறவறம் பூண்டார்.

தமது 35 ஆவது வயதில் 23.05.1967-இல் துறவுபூண்ட பின் ஊரன் அடிகள் 1969-இல் வடலூர் சன்மார்க்கப் பணிக்கு வந்தார். "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 23.05.1968 முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 

வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும் பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள், புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், இராமலிங்க அடிகள் வரலாறு, வள்ளுவரும் வள்ளலாரும், வள்ளலார் கண்ட முருகன் என சுமார் 22 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாரிஸ், லண்டன், ஜெர்மனி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வள்ளலாரின் புகழ்பரப்பும் பணியை மேற்கொண்டார்.

23.05.1968 முதல் வடலூரையே வசிப்பிடமாக்கி வாழ்ந்து வந்த ஊரன் அடிகளார் கடந்த 23.5.2022 அன்று அவரது இல்லத்தில் எளிமையான முறையில் 90-ஆவது அகவை எனும் பிறவித் திருநாள் கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஜூலை 13) குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்.  

இவரின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் வடலூரில் நடக்க உள்ளது.

1970 முதல் 2000 ஆண்டு வரையில் வடலூரில் சன்மார்க்க நிலையங்களின் அறங்காவலர், அறங்காவலர் குழுத் தலைவர், தக்கார் தர்மசாலை திருப்பணி குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து தொண்டாற்றியவர். 

சுத்த சன்மார்க்க நிலைய செயலராக 1969 முதல் 1983 வரையில் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com