
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். அவர் இதனை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதையும் படிக்க: தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை கூடாது: தமிழக அரசு
செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திர பாபு பேசியதாவது: “ பள்ளிக்கூடத்தை தாக்கியது என்பது தனி வழக்கு. அது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தை முன்கூட்டியே கணித்ததால் தான் டிஐஜி தலைமையில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டனர். இந்த வன்முறையினை எந்த வித உயிர்ச் சேதமும் இல்லாமல் காவல் துறை திறம்பட கையாண்டுள்ளது. சட்டவிரோதமாக கூடியது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது மற்றும் காவல் துறையினரைத் தாக்கியது போன்ற பிரிவுகளில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்ட மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்.” எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி இணைந்து சந்தித்தனர்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி வன்முறை: ‘ தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது ‘
உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி கூறுகையில், ஒரு பள்ளியில் நடந்த அசாம்பாவிதத்திற்கு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது எனக் கூறுவது சரியான முடிவாக இருக்காது என தெரிவித்தார். மேலும், வதந்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.