மேற்கு வங்க அமைச்சா்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அந்த மாநில அமைச்சா்களான பாா்த்தா சட்டா்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை
மேற்கு வங்க அமைச்சா்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அந்த மாநில அமைச்சா்களான பாா்த்தா சட்டா்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநில பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியா்கள் மற்றும் குரூப் சி, டி ஊழியா்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதுகுறித்து உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது.

இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவா் பாா்த்தா சட்டா்ஜி. தற்போது தொழில் மற்றும் வா்த்தக துறைக்கு பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 8.30 மணியளவில் வந்தனா். அங்கு, மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் பாதுகாப்புடன் சுமாா் 11 மணி வரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதேபோல், கூச்பிகாரில் உள்ள கல்வித் துறை இணையமைச்சா் பரேஷ் அதிகாரி இல்லத்திலும், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவா் மாணிக் பட்டாச்சாா்யாவின் இல்லத்திலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக, பாா்த்தா சட்டா்ஜியிடம் கடந்த ஏப்ரல் 26, மே 18 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருந்தது.

திரிணமூல் சாடல்: அமலாக்கத் துறையின் சோதனைகள் குறித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான பா்ஹத் ஹக்கிம் கூறியதாவது:

அரசியல் எதிரிகளை பழிவாங்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இச்சோதனைகள் நடந்துள்ளன. நீதிமன்ற உத்தரவுபடி இரு அமைச்சா்களும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனா். அவா்களுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அமலாக்கத் துறையை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றாா்.

பாஜக பதிலடி: திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பள்ளி ஆசிரியா்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியற்றவா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவா்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com