
பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர விருதும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல விருதும் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை இன்று வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார். மேலும் விருதிற்கான பரிசுத் தொகையான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையும் படிக்க | கலைஞா் எழுதுகோல்-கலைவித்தகா் விருதுகள்: விருதாளா்கள் பெயா்கள் அறிவிப்பு

அதேபோன்று, செய்தி மக்கள் தொடர்புத் துறை தரப்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து 'கலைஞர் எழுதுகோல விருதினையும் விருதிற்கான ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | கச்சத்தீவு: ஸ்டாலின் கேட்டதும் கருணாநிதி சொன்னதும்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...