
சீர்காழி: சீர்காழியை அடுத்த புங்கனூர் ரயில்வே கேட் ஒரு மணி நேரம் கடந்தும் திறக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இரயில் வந்த போது மூடப்பட்ட ரயில்வே கேட் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் திறக்கமுடியாததால் 5 கி.மீ. தொலைவுக்கு கிராம மக்கள் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இச்சாலைதான் புங்கனூர், காடாகுடி, கோடங்குடி, நிம்மேலி, ஆதமங்கலம், மருதங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ரயில் வருவதற்காக மூடிய கேட் 1 மணி நேரமாகியும் திறக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் ஏற்பட்ட தொழில்துட்ப கோளாறால் சிக்னல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரயில் கடந்து சென்றும் கேட்டை திறக்க முடியவில்லை என கேட் கீப்பர் கூறினார்.
இதனால் 10-ற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த வழியாகத்தான் வைத்தீஸ்வரன் கோவில் செல்வார்கள். இரயில்வே கேட் பழுதால் தொழுதூர் வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றியே சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பழுதை சீரமைத்தனர்.