அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம்?

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அக்கட்சியில் தலைமை பதவிக்கு தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம்?

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அக்கட்சியில் தலைமை பதவிக்கு தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அதிமுகவின் தலைமைக்கான மோதல் அக்கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா தற்காலிக பொதுச்செயலாளரானதும் அதனைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு முதல்வரானதும் அதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து ‘தர்மயுத்தம்’ நடத்தியதும் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதது. 

அதனைத் தொடர்ந்து அக்கட்சியில் நடந்த மாற்றங்களையும், திருப்புமுனைகளையும் நாடறியும். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி இடையே போட்டாபோட்டி நடந்து வருகிறது. 

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமர்ந்தபின்னும் எதிர்க்கட்சித் தலைவருக்காக நடந்த மோதலில் எடப்பாடி கே.பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆளும் கட்சியாக இருந்ததிலிருந்து சட்டப்பேரவை பதவிகளைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்த எடப்பாடி கே.பழனிசாமி அதன்மூலம் கட்சியைக் கைப்பற்றுவதற்கான வேலைகளில் இறங்கியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். ஆட்சியில் பொறுப்பா? அல்லது  கட்சியில் தலைமையா? என்கிற போட்டியில் கட்சியைக் கைப்பற்ற நினைத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தது. ஆனால் தற்போது அந்தக் கட்சிப் பொறுப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களைக் கோபமடையச் செய்துள்ளது.

குறிப்பாக நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக ஒற்றைத் தலைமை விவகாரம் மாறியுள்ளது. இது ஓபிஎஸ் பதவியைப் பறிப்பதற்கான முன்னோட்டம் என அவரது தரப்பு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தற்போது இரட்டை தலைமையே வேண்டும் எனவும், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் எனவும் தெரிவித்தார். மேலும் ஒருபடி மேலே சென்று இதுதொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமியுடன் கலந்து பேசவும் தயார் என அறிவித்தார். இவற்றுக்கு மத்தியில் தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல் இருந்ததையும் போட்டுடைத்தார்.

தன் தரப்பில் சிக்கல் இல்லை என நிர்மாணிக்க முயன்று ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் இதுவரை இதுதொடர்பாக தன்னுடைய வெளிப்படையாக விளக்கத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்காமல் இருப்பது அவரின் தீவிரத்தைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தீர்மானக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியும் இவ்விவகாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளன.

அமைப்புரீதியாக பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுக்குழுவில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதவி பறிப்பு நிச்சயம் என எடப்பாடி தரப்பு அரசியல் கணக்கு போட்டு வரும் நிலையில் எப்படியாவது பொதுக்குழுவில் இந்த விவகாரத்தை விவாதிக்காமல் இருப்பதற்கான முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுகவில் இத்தகைய தலைமை பூசல் நடப்பது இதுவொன்றும் புதியதல்ல. எனினும் அதிமுகவை பாஜக இயக்குகிறது என்ற ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணியின் கருத்து நிலவிவரும் இன்றைய சூழலில் அடுத்தது யார் அதிமுகவின் தலைமை என்பதில் அடங்கியிருக்கிறது அக்கட்சியின் எதிர்காலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com