பரவும் கரோனா: சென்னையிலும் முகக் கவசம் கட்டாயமா?

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகரில் விரைவில் முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையிலும் முகக் கவசம் கட்டாயமா?
சென்னையிலும் முகக் கவசம் கட்டாயமா?

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகரில் விரைவில் முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மூன்றாம் அலைக்கு பிறகு மீண்டும் தற்போது பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24  மணி நேரத்தில் புதிதாக 9,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சில நாள்களாகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 686 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 3,951ஆக அதிகரித்துள்ளது.

அதிகளவாக சென்னையில் 294, செங்கல்பட்டு 129, திருவள்ளூர் 50, கன்னியாகுமரி 47, காஞ்சிபுரம் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் கரோனா வகையால் உயிரிழப்புகள் குறைவு என்றாலும், பெருமளவில் நோய்த் தொற்று பரவும்பட்சத்தில் உயிரிழப்பு மற்றும் கரோனாவுக்கு பிந்தைய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், ஒட்டுமொத்தமாக மாநில அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே சில மாவட்டங்களின் ஆட்சியர்கள் கரோனா கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியனும் மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் திருமணம், துக்க நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கை பற்றியும் அறிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி வெளியிட்ட அறிவிப்பில், “முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுதல், வணிக வளாகங்களில் குளிர்சாதனம் பயன்படுத்தத்  தடை, திருமண நிகழ்வில் 100 பேர், இறப்பு நிகழ்வில் 50 பேர்” என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கணிசமான பகுதி சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் விரைவில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருமணம், இறப்பு நிகழ்வுகள் மற்றும் வணிக வளாகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com