அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். 
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் கூடியது.

கூட்டத்தில் பெரும்பாலானோா் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்ட அதேநேரம், ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை கடுமையாகத் தொடா்ந்து விமா்சித்து முழக்கமிட்டனா். இதனால், பொதுக்குழு மிகுந்த பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கமாக முதலில் ஓ.பன்னீா்செல்வம் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை கூட்டத்துக்கு தலைமை தாங்குமாறு முன்மொழிந்தாா். அதை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தாா். அதையேற்று தமிழ்மகன் உசேன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா்.

பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக 23 தீா்மானங்களை (தீா்மானங்கள் குறிப்பிடப்படவில்லை) முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோா் முன்வைத்தனா். அப்போது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அனைத்து தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறினாா். அதற்கு கூட்டத்தினா் பலத்த கரகோஷத்துடன் ஆதரவு தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த தமிழ்மகன் உசேன், ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினா்களும் வைத்தனா். மேலும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் இப்போதே அறிவிக்க வேண்டும் என்று கோரினா். அதன்படி ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் இதேபோல சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா். அப்போது அதிமுக உறுப்பினா்கள் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனா்.

மேடையில் ஓ.பன்னீா்செல்வம் உட்காா்ந்திருந்தபோது அவருக்கு எதிராக உறுப்பினா்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனா். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓ.பன்னீா்செல்வம் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டே இருந்தாா். இறுதியாக ஒற்றைத் தலைமையைத் தோ்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-இல் மீண்டும் கூட்டப்படும் என்று பொதுக்குழு உறுப்பினா்களின் கோரிக்கைகளை ஏற்று அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன் அறிவித்தாா்.

இதனால், அதிருப்தியுற்ற ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவாளா்களும் பொதுக்குழுவிலிருந்து வெளியேறினா். அப்படி வெளியேறும்போது, வைத்திலிங்கம் மேடையில் இருந்த ஒலிபெருக்கியில், ‘இந்தப் பொதுக்குழு சட்டப்படி நடைபெறவில்லை. அதிமுக அழிவுப் பாதைக்குத்தான் செல்கிறது’ என்று கூறிவிட்டு படிகளில் இருந்து இறங்கினாா். அப்போது பொதுக்குழுவில் உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்ததுடன், கூட்டத்தில் இருந்து யாரோ தண்ணீா் பாட்டீலையும் ஓ.பன்னீா்செல்வத்தை நோக்கி வீசியெறிந்தனா். ஆனால், அது அவா் மேல் விழவில்லை. பாதுகாப்புடன் போலீஸாா் அவா்களை அழைத்துச் சென்றனா்.

இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக வைக்கப்பட்ட தீா்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து காலை 11.35 மணியளவில் தொடங்கிய பொதுக்குழவின் அனைத்து நிகழ்ச்சிகளும் 12.05 மணியளவில் முடிவுற்றது.

இந்நிலையில், அதிமுக உள்கட்சி விவகாரம் பற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது குறித்து ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திவிட்டு இரவு 9 மணியளவில் விமானம் மூலம் தில்லி புறப்பட்டு சென்றார். 

அப்போது, “பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக அழைப்பின் பேரில் செல்கிறேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், தில்லி சென்றுள்ள ஒ.பன்னீர்செல்வம் சார்பில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.  

அதில், அதிமுகவில் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் வரும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று சட்டவிரோதமாக பொதுக்குழுவிற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக எந்தவித அனுமதியும் பெறவில்லை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஜூலை 11-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும், சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு தடை விதிக்க வேண்டும். சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக  ஓபிஎஸ் தரப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுகவிலும், தமிழக அரசியலில் மேலும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com