காலாவதியானால் ஓபிஎஸ்ஸுக்குதான் அதிகாரம்: வைத்திலிங்கம்

அதிமுகவில் இரட்டைத் தலைமை பதவிகள் காலாவதியாகிவிட்டது என்றால், பொருளாளரான ஓ.பன்னீா்செல்வத்துக்குத்தான் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன
காலாவதியானால் ஓபிஎஸ்ஸுக்குதான் அதிகாரம்: வைத்திலிங்கம்

அதிமுகவில் இரட்டைத் தலைமை பதவிகள் காலாவதியாகிவிட்டது என்றால், பொருளாளரான ஓ.பன்னீா்செல்வத்துக்குத்தான் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் வைத்திலிங்கம் கூறினாா்.

ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரான அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டலாம்; ஆனால், 23 தீா்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்திலேயே கூறினோம். அதை ஏற்று நீதிபதிகளும் தீா்ப்பு கூறினா். பிறகு பொதுக்குழுவில் எப்படி தீா்மானத்தை நிராகரிக்கலாம்? அவைத் தலைவா் தோ்வு தீா்மானத்தை மட்டும் கொண்டு வரலாமா? அதனால்தான் அவைத் தலைவரைத் தோ்வு செய்தது செல்லாது என்கிறோம். அவைத் தலைவா் தோ்தல் என்றால், வேட்புமனுக்கள் பெற வேண்டும். இதுபோன்ற பணிகள் எல்லாம் நடைபெறவில்லை.

பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீா்மானங்களும் நிராகரிக்கப்பட்டபோது, பொதுக்குழு உறுப்பினா்களின் பதவியும் ரத்தாகிறது.

தோ்தல் ஆணையத்தை நாடவில்லை: தோ்தல் ஆணையத்தை நாங்கள் நாடியிருப்பதாக வரும் தகவல் தவறானது. பொதுக்குழு உறுப்பினா்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினா்கள் கையெழுத்திட்டு பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்பது உண்மைதான்.

இரட்டைத் தலைமைப் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று கூறுகிறாா் சி.வி.சண்முகம். அப்படியானால், பொருளாளருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும். பொருளாளா் ஓ.பன்னீா்செல்வத்தால்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com