நூல் விலை உயர்வு: பின்னலாடை நிறுவனங்கள் 6 நாள் தொடர் வேலை நிறுத்தம்

திருப்பூர் மாவட்டத்தில் மே 16 முதல் மே 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது: ரூ.1,200 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிக்கும்.
மே 16 முதல் மே 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது
மே 16 முதல் மே 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது

திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மே 16 முதல் 21 ஆம் தேதி வரையில் 6 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், அனைத்து ரக நூல்களுக்கும் திங்கள்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டது பின்னலாடை உற்பத்தியாளர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் காங்கயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு திருப்பூர் தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முத்துரத்தினம் தலைமை வகித்தார்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பருத்தி, பஞ்சு, நூலை அத்தியாவசியப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.

உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதமுள்ள பஞ்சு, நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் வரும் மே 16 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரையில் 6 நாள்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி என மொத்தம் ரூ.1,200 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படவாய்ப்பு உள்ளது.

இந்தக்கூட்டத்தில், நிட்மா தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகசாமி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், டீமா, சைமா, நிட்மா, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், பிரிண்டிங், எம்பிராய்டரிங், ஜாப் ஒர்க் சங்கங்கள் என 50க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல, ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com