115 கோடி பெண்கள் பயன்பெற்ற இலவசப் பேருந்து பயணம்

தமிழ்நாட்டில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. 
115 கோடி பெண்கள் பயன்பெற்ற இலவசப் பேருந்து பயணம்
115 கோடி பெண்கள் பயன்பெற்ற இலவசப் பேருந்து பயணம்


தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. 

பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மகளிரின் ஏகோபித்த ஆதரவுக்கும் இடையே தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பயன்பெற்ற மகளிரின் எண்ணிக்கை 115 கோடி என்கிறது தரவுகள்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்து,  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஐந்தினைச் செயல்படுத்தும் விதமாகவும் ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 

அதில் ஒன்றுதான் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்பதாகும். மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு மே 7ஆம் தேதியன்றே வெளியிட்டது.  

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.

மறுநாளே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்

மகளிருக்கு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயண திட்டம் மே 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய நாளே அரசாணை வெளியிடப்பட்டு மறுநாளே (மே 8) நடைமுறைக்கு வந்தது. இரவோடு இரவாக பேருந்துகளில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மிகவேகமாக பயன்பாட்டுக்கு வந்தது இந்த திட்டம். 

மே 8ஆம் தேதி காலை... சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் ஏறிய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஏழை, எளிய பெண்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமைந்தது. வேலைக்குச் செல்லும் மகளிரால் கொண்டாடப்பட்டது.

பெண்களின் இலவச பயணத்தையும் ஒரு ஒழுங்குப்படுத்தி, அதன் தரவுகளை வைத்திருக்க விரும்பிய தமிழக அரசு, தனியாக மகளிருக்கு இலவச பயணம் என்று குறிப்பிட்டு டிக்கெட்டுகளையும் அச்சடித்து வழங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது. அதனால் பயன்பெற்றோர் எத்தனை பேர் என்ற தரவுகள் கிடைத்துள்ளன.

2022-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் இயக்கப்படும் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 876. அதில், மாநில அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் 20 ஆயிரத்து 926. தனியாரால் இயக்கப்படுபவை 7 ஆயிரத்து 858. சிறிய பேருந்துகள் 4 ஆயிரத்து 92.

அதன்படி, இலவச பயணத் திட்டத்துக்காக 7 ஆயிரத்து 321 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், நாளொன்றுக்கு 36 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் மாதம் இறுதி வரையில் சுமார் 115 கோடி பெண்கள் பயணித்துள்ளனர். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவில் செலவிடப்படுகிறது என்கிறது புள்ளிவிவரங்கள்.

இலவச பயணம் ஏன்? 

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, பெண்களுக்கு இலவசமாகப் பயணிக்க அனுமதியளித்தது ஏன்? என தமிழக அரசு விளக்கமளித்திருந்தது.

இதுகுறித்து சமூக நலத்துறைச் செயலா் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட உத்தரவில்: 2021-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கான முதல்வரின் தோ்தல் அறிக்கையில், தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூா்ப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போது மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில், பெண்கள் உயா்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுயதொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும்.

பெண்களின் பங்களிப்பை உயா்த்துவது அவசியம்: தமிழகத்தில் பணிபுரியும் ஆண்களின் விகிதத்தைக் கணக்கில் கொள்ளும்போது பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு 31.8 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சிக்குப் பெண்களும் சிறப்பான பங்களிப்பை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பணிகளில் பெண்களின் பங்களிப்பு சதவீதத்தை உயா்த்த வேண்டியது அவசியமாகிறது.

பொருளாதார தேவைக்கு உகந்தது: உயா்கல்வி கற்பதற்காகவும், பணிநிமித்தமாகவும், பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூகப் பொருளாதாரத் தேவைக்கு உகந்ததாக அமையும்.

சாதாரணக் கட்டணப் பேருந்தில் அனுமதி: இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிா் மற்றும் உயா் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் பலன்?

உண்மையில், படிக்கும் கல்லூரி மாணவிகள், படிக்க நினைக்கும் மகளிர், சமூக அறிவைப் பெற நினைக்கும் பெண்களுக்கு, வீட்டில் இருந்தபடியே சிறு குறு தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்று. 

♦ சுய தொழில் செய்யும் பெண்களுக்கு..

♦ வீட்டிலேயே சிறு தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு..

♦ நேரம் கிடைக்கும்போது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல திட்டமிடும் பெண்களுக்கு.. 

♦ ஆயிரம், இரண்டாயிரம் சம்பளத்துக்கு அரை மணி நேரம் பயணம் செய்து அடுத்தவர் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு.. 

♦ துணிக்கடைகளில், சிறு நிறுவனங்களில், தூய்மைப் பணியாளர்களாக, கட்டட வேலையில் சித்தளாக பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் பெண்களுக்கு..

♦ சில கிமீ தூரம் உள்ள தன் அம்மா வீட்டுக்குச் செல்ல கணவனின் பையை எதிர்பார்க்கும் பெண்களுக்கு.. 

♦ குழந்தைகளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் தாய்மார்களுக்கு..

♦ குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்களுக்கு..

♦ வீட்டில் கணவரின் வருமானம் போதவில்லை, குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்க உதவும் என யோசித்து வேலைக்குச் செல்ல தயாராகும் பெண்களுக்கு இந்த திட்டம் பேரானந்தம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சி, ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியையும் கொண்டே கணக்கிடப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் வரிசையில் இதுவும் அதில் ஒன்று என பார்க்கலாம். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com