
வாகன நெரிசலுக்கு விடிவுகாலம்: பயன்பாட்டுக்கு வந்தது மிகநீள பாலம்
சென்னை: மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதன் மூலம், சென்னையில் மிகநீள பாலம் என்ற புகழுடன் இந்த புதிய பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைப் போக்குவரத்தில் பல காலமாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசல் எனப்படும் பெருந்துயரம் முடிவுக்கு வருகிறது.
இதையும் படிக்க.. என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதி கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருந்தது.
இந்த மேம்பாலத்தை, இன்று காலை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
விழாவில், அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ .அன்பரசன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் ரூ.95.21 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 2.06 கி.மீ. நீளம் கொண்டது. இது சோலிங்கநல்லூர், மாம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், தாம்பரம் - வேளச்சேரி வரையிலான பகுதிகளை மிக எளிதாக இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய காத்திருப்பவரா? அருமையான வாய்ப்பு
நாள்தோறும் இந்த சாலைப் பகுதியை சுமாராக 1.25 லட்சம் வாகன ஓட்டிகள் கடந்து செல்வதாக புகைவிவரம் மன்னிக்கவும் புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த பாலம் திறக்கப்பட்டிருப்பதன் மூலம், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வருவோர் எந்த தாமதமும் இல்லாமல் சில நூறு ரூபாய் எரிபொருள் மிச்சத்துடன், நேர மிச்சத்தையும் பெற்று பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@CMOTamilnadu @mkstalin inagurate the longest new flyover construed at the cost of Rs.95.21 crore by the highways department at Medavakkam- Nanmangalam on the Tambaram velachery high road on Friday. @NewIndianXpress @xpresstn @shibasahu2012 @haisat2005 pic.twitter.com/TRBaUQEtbA
— Ashwin Prasath (@ashwinacharya05) May 13, 2022
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.146.41 கோடி மதிப்பீட்டில், மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு தனித்தனி மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வேளச்சேரி - தாம்பரம் தடத்தில், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.
தற்போது, தாம்பரம் - வேளச்சேரி தடத்தில், மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. நீளத்தில் இம்மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும், தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.
இந்த மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் ஓராண்டுக்கும் மேலாக பாலம் அமைக்கும் பணி பாதியில் நின்றுபோயிருந்தது. இதனால், பாலம் கட்டுமானப் பணியை ஒதுக்கியிருந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் டெண்டர் விடப்பட்டு புதிய ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்கப்பட்டது. மீண்டும் பாலம் கட்டும் பணி 2018ஆம் ஆண்டில் தொடங்கியது.
மடிப்பாக்கம் - தாம்பரம் பகுதிகளை இணைக்க இதன் மூலம் தற்போது இரண்டு மேம்பாலங்கள் வந்துவிட்டன. ஏற்கனவே ஒன்று மேடவாக்கம் முதல் நன்மங்கலம் வரையில் பயன்பாட்டில் உள்ளது. தற்போது தாம்பரம் - வேளச்சேரியை இணைக்க மேடவாக்கம் வழியாக புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
முதல் மேம்பாலம் இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாவது மேம்பாலம் மூன்று ஆண்டு தாமதத்துக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.