கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் பிட் தயாரிப்பு: அரசுத் தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்

கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட பிட் காகிதங்களை அரசுத் தேர்வுகள் பறக்கும் படை குழு பறிமுதல் செய்தது.
மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிட் காகிதங்கள்
மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிட் காகிதங்கள்
Updated on
1 min read

நாமக்கல்: கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள் பறக்கும் படை குழு அவற்றை பறிமுதல் செய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் 200 மையங்களில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் பிளஸ் 1 தேர்வு கடந்த 10-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கொல்லிமலை வாழவந்தி நாடு ஜிடிஆர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குனர்( மேல்நிலைக் கல்வி) பொன்.குமார் திங்கள்கிழமை கொல்லிமலைக்கு ஆய்வுப் பணிக்காகச் சென்றார். அப்போது வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்தனர். அவர் அங்கு சென்று பார்த்தபோது 'மைக்ரோ பிட்' என்னும் சிறிய வகையில் பாடப் புத்தகத்தில் இருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக கடையில் இருந்த அவற்றை பறிமுதல் செய்த இணை இயக்குனர் ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். 

மேலும், மாணவ மாணவிகளிடம் இருந்து சுமார் அரை கிலோ எடை அளவில் ஜெராக்ஸ் பிட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். மாணவர்களின் நலன் கருதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் முன்னதாகவே மாணவர்களிடம் இருந்து பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்லிமலை மட்டுமன்றி குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலும் ஜெராக்ஸ் கடை களில் பொதுத்தேர்வுக்கான பிட் தயாரித்துக் கொடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசுத் தேர்வுகள் பறக்கும் படையினர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மையங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com