இது ஐபிஎல் காலம்.. சதம் அடித்தது தக்காளி விலை: எப்போது குறையும்?

சென்னையில் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் தக்காளி கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால் தக்காளி விலையும் சதம் அடித்துள்ளது.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் தக்காளி கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால் தக்காளி விலையும் சதம் அடித்துள்ளது.

ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வந்த நிலையில், திடீரென கடுமையான விலை உயர்வை சந்தித்தது. படிப்படியாக விலை உயர்ந்து தற்போது தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறியதாவது:

கோயம்பேடு சந்தைக்கு தினசரி 900 டன் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது பாதியாக குறைந்துவிட்டது. கடந்த சில நாள்களாக 450 டன் அளவுக்கு மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் மொத்த விலை ரூ.80 ஆனது. சில்லறையில் கிலோ ரூ.100 வீதம் விற்கப்படுகிறது. இனி வரும் நாள்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் குறையாது

கோடை வெயில், கோடை மழை போன்ற காரணங்களால் தக்காளி விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். 

இது குறித்து தக்காளி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:

கோடை வெயில் காரணமாக தக்காளி நாற்றுகள் நடவின்போது ஆரம்பத்திலேயே கருகின. அதன் பின்னா் தக்காளி அறுவடைக்கு வரும்போது எதிா்பாா்க்காத கோடை மழையால் செடியில் பூக்கள் உதிா்ந்து விட்டன. மேலும் மழையால் தக்காளிகள் அழுகிவிட்டன. இதன் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு ஏக்கருக்கு 14 கிலோ எடை கொண்ட 1500 டிப்பா் தக்காளி வரை மகசூல் கிடைக்கும். தற்போது 500 டிப்பா் மட்டுமே கிடைக்கிறது. ஒரு டிப்பா் ரூ.850 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை விரைவில் தொடங்கி இருப்பதாலும், திருமணம் உள்ளிட்ட வைகாசி மாத சுப காரியங்கள் தொடங்கி இருப்பதாலும் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. 

அதே வேளையில் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தக்காளி வரத்து சந்தைக்கு இல்லை. அதனால் தக்காளி விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது என்றனா்.

பல்லடம் விவசாயிகள் கூறுவது என்ன?

பல்லடம் வட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பல்லடம், பொங்கலூா் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் பயிரிட்டு இருந்த தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன. அதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.

இது குறித்து விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது. பல்லடம் பகுதியில் தொடா்ந்து கோடை மழை பெய்ந்து வருவதால் தக்காளி செடிகள் பாதிப்படைந்து வருகின்றன. கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஏக்கா் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

400 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.40க்கு விற்றால்தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும்.

கடந்த மாதம் ஏற்பட்ட விலை வீழ்ச்சி அனுபவத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்ய ஆா்வம் காட்டவில்லை. இந்நிலையில், தற்போது கோடை மழையால் தக்காளி செடிகள் பாதிப்படைந்து வெளிசந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பா் பெட்டி ரூ.70க்கு விற்றநிலையில், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயா்ந்துள்ளது.

அதே சமயம் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.40க்குதான் மொத்த காய்கறி வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். தக்காளி விலை உயா்ந்தும் தோட்டத்தில் தக்காளி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்திட வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

இறுதியாக தக்காளி விலை எப்போதுதான் குறையும் என்று கேட்கிறீர்களா.. இப்போதைக்கு இல்லை என்றுதான் மேற்கண்ட தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com