வருமான வரித் துறை
வருமான வரித் துறை

பருப்பு, பாமாயில் விநியோக நிறுவனங்களில் மோசடி! 2வது நாளாக சோதனை

பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருள்களை அரசுக்கு விநியோகிக்கும் சில நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருள்களை அரசுக்கு விநியோகிக்கும் சில நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

80 இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அதனைத் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், சென்னை, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் நிறுவனம், தண்டையாா்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா டிரேடா்ஸ் நிறுவனம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இன்டெகரேடட் சா்வீஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், தண்டையாா்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனம் உள்ளிட்டவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

நிறுவன உரிமையாளா்களின் வீடுகள், அவா்களுக்கு தொடா்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 80 இடங்களில் காவல் துறை பாதுகாப்புடன் நேற்று சோதனை நடைபெற்றது.

இதில், இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து முறையாக கணக்குகள் இல்லாமல் இறக்குமதி  செய்யப்பட்ட பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி தொடர்பான ஆவணங்கள், ரொக்க பணம், பென்டிரைவ், வன்வட்டு (ஹார்ட் டிஸ்க்), வங்கி கணக்கு புத்தகங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை தொடா்ந்து நடைபெற உள்ளதால், கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்களின் மதிப்பு சோதனை முடிவில்தான் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக சென்னையிலுள்ள ரேஷன் பொருள் விநியோக நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் அந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீறி உள்ளே வருபவர்களைத் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com