ஹிந்தி மொழித் திணிப்பைக் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்குத் தகுதி பெறுவார்கள் என்றும், ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது, கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.

இவையனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை. நமது தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும்.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள் என்றும், இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் உள்ளது. 

ஹிந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, ஹிந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது.

அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும்.

அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com