பொங்கல்: தெற்கு ரயில்களில் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

பொங்கல் திருநாளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.
பொங்கல்: தெற்கு ரயில்களில் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

பொங்கல் திருநாளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஜனவரி 12 ஆம் தேதி பயணிக்க செப்.14 - புதன்கிழமையும் ஜனவரி 13 ஆம் தேதி பயணிக்க செப். 15 - வியாழக்கிழமையும், பொங்கலுக்கு முந்தைய  நாளான ஜனவரி 14 ஆம் தேதி பயணிக்க  செப். 16- வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதன்படி, ஜன. 13 பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு, சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. 

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட மதுரைக் கோட்டத்தின் கீழ் உள்ள தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டன. 

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிட்டன. அதுபோல கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் அதிவிரைவு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியலில்கூட டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத (Regret) நிலை உள்ளது. 

மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் இதர ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் எண் 200-300க்கும் மேல் உள்ளது.

வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் பொங்கல் பண்டிகைக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

மேலும், சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு பொங்கல் (ஜன.15) அன்று பயணிக்க செப். 17 ஆம் தேதியும், பொங்கலுக்கு மறுநாளான ஜன. 16 ஆம் தேதி பயணிக்க செப். 18 ஆம் தேதியும், ஜன. 17 ஆம் தேதி பயணிக்க செப். 19 ஆம் தேதியும், ஜன. 18 ஆம் தேதி பயணிக்க செப். 20 ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com