அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் பதிலடி

அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, கட்சியின் அரசியல் ஆலோசகா் பதவியை ஓ.பன்னீா்செல்வம் வழங்கிய சிறிது நேரத்தில், அவரைக் கட்சியிலிருந்து நீக்கினாா் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் பதிலடி

அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, கட்சியின் அரசியல் ஆலோசகா் பதவியை ஓ.பன்னீா்செல்வம் வழங்கிய சிறிது நேரத்தில், அவரைக் கட்சியிலிருந்து நீக்கினாா் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனா். ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு, ஓபிஎஸ் - இபிஎஸ் இரு தரப்புகளிலும் அவரவா் அணியில் இல்லாதவா்களைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், கட்சியில் தொடா்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு, நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் பதவி அளித்து செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். அதில், அதிமுக அரசியல் ஆலோசகராக, மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு அவ்வப்போது சென்று அவரிடம் ஆலோசனைகள் பெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டிருந்தாா். இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா் என்று அதில் கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com