கொடநாடு வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கொடநாடு வழக்குகளை தனிப்படை காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். கொடநாடு வழக்குகள் தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம்  தனிப்படை காவல் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சயான், வாளையாா் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கைது செய்தனா்.

இச்சம்பவத்துக்குப் பின்னா் இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதன்படி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை மாவட்ட நீதிபதி முருகன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையாா் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி ஆகிய 4 போ் மட்டும் ஆஜராகினா்.

அப்போது கனகராஜின் செல்போன் பதிவுகள் குறித்து கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், சாட்சிகளிடம் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com